தொடர்ந்து பத்தாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யாமல் 4 சதவீதமாக இந்திய ரிசர்வ் வங்கி வைத்துள்ளது. ரிசர்வ் ரெப்போ விகிதமும் எந்த மாற்றமும் இல்லாமல் 3.35 சதவீதம் எனும் அளவில் உள்ளது.


ஆறு நபர் நிதி கொள்கை குழுவின் முடிவுகளை (Monetary Policy Committee) இன்று அறிவித்த இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், 2022-23 நிதி ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதமாக  இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.


 






 


இதர முக்கிய அறிவிப்புகள்: 


இ-ருபி டிஜிட்டல் வவுச்சருக்கான பண உச்ச வரம்பை 10,000ல் இருந்து 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 


அவசர சுகாதார சேவைகள் எளிதில் கிடைப்பதற்கும், கொவிட் தொடர்பான சுகாதார கட்டமைப்பு மற்றும் சேவைகளை அதிகரிப்பதற்கும், வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பணபுழக்க வசதி (On-Tap Term Liquidity Facility to Ease Access to Emergency Health Services)  2022 ஜூன் 30ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது.


ஒமிக்ரான் மூன்றாவது அலை காரணமாக நாட்டின் பொருளாதாரம் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, வர்த்தகம், போக்குவரத்து போன்ற முக்கியத் துறைகளில் (COntact Intensive Sectors) மந்தநிலை காணப்படுகிறது.  


ரெப்போ/ ரிவர்ஸ் ரெப்போ என்றால் என்ன?


வணிக வங்கிகளுக்கு (Scheduled Commercial banks) ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன் வழங்கும்பொழுது விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம் எனப்படுகிறது. இவ்வங்கிகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படும்பொழுது அவைகள் பத்திரங்களை ஈடாக வைத்து இந்திய ரிசர்வ் வங்கியில் கடனைப் பெறும். அந்நிலையில், விதிக்கப்படும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம் எனப்படும். 


பணவீக்கத்தைக் (கட்டுப்படுத்த/ அதிகரிக்க) ரெப்போ விகிதத்தை (அதிகரிப்பதன்/குறைப்பதன்)  மூலம் கடன் வாங்குவதற்கான செலவை (அதிகப்படுத்தி/ குறையப்படுத்தி), கடன் வாங்குவதை இந்திய ரிசர்வ் வங்கி குறைக்கிறது/அதிகரிக்கிறது.  


பணவாட்ட (Deflation) சூழ்நிலையில் வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான இந்திய ரிசர்வ் வங்கி கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே ரிவர்ஸ் ரெப்போ என்று அழைக்கப்படுகிறது. ரிவர்ஸ் ரெப்போவை உயர்த்தினால், அது வணிக வங்கிகளுக்கு இலாபகரமான வட்டி விகிதமாகி, அவைகளிடம் உள்ள பணத்தை ரிசர்வ் வங்கியிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. இதனால் அந்த பணத்திற்கு உயர் பாதுகாப்பு கிடைக்கிறது. இதனால் வணிக வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பது குறைகிறது. இது இயற்கையாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும்.