மயிலாடுதுறை: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநிலம் தழுவிய தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் தனது முதல் கட்டப் பிரச்சாரத்தை நிறைவு செய்த அவர், தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறையில் தனது அடுத்தகட்ட வேட்டைத் தொடங்கி உள்ளார். சீர்காழியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் இரண்டு மாவட்ட வேட்பாளர்களை ஆதரவாக உரையாற்றிய அவர், தன்னை அந்த மண்ணின் மருமகனாக அடையாளப்படுத்திக் கொண்டு வாக்குகளைச் சேகரித்தார்.

Continues below advertisement

உரிமையோடு கேட்கும் வாக்கு

கூட்டத்தில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழகத்தின் பிற ஊர்களுக்கு நான் முதலமைச்சராக இருக்கலாம். ஆனால், இந்தச் சீர்காழியைப் பொறுத்தவரை நான் முதலமைச்சர் ஆவதற்கு முன்பே உங்கள் ஊர் மாப்பிள்ளை! உங்கள் ஊரில் பெண் எடுத்த அந்த உரிமையோடு, உங்கள் வீட்டு மருமகனாக இங்கு வாக்கு கேட்க வந்திருக்கிறேன்," 

மேலும், கலைஞர் பிறந்த மண்ணான நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மக்கள் எப்போதும் திமுகவிற்கே வெற்றியைப் பரிசளிப்பவர்கள் என்றும், இந்தத் தேர்தலிலும் 100 சதவீத வெற்றி உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஏழாவது முறையாக திமுக தலைமையிலான அரசு அமையவும், 'திராவிட மாடல் 2.0' ஆட்சியைத் தொடரவும் மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.

Continues below advertisement

ஆறு தொகுதி வேட்பாளர்கள் அறிமுகம்

இந்தக் கூட்டத்தில் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஆறு வேட்பாளர்களை முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்

பூம்புகார்: கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு அநேகத் திட்டங்களைக் கொண்டு வந்த தற்போதைய எம்.எல்.ஏ நிவேதா முருகன் (திமுக - உதயசூரியன்).

மயிலாடுதுறை: ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரிய இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளர் ஒய்.என். ஜமால் முகமது யூனுஸ் (காங்கிரஸ் - கை).

சீர்காழி: வைகோவின் நம்பிக்கையைப் பெற்ற வழக்கறிஞர் செந்தில் செல்வன் (மதிமுக - உதயசூரியன்).

வேதாரண்யம்: கழக முன்னோடி மா. மீனாட்சி சுந்தரத்தின் மகன் மாமி புகழேந்தி (திமுக - உதயசூரியன்).

நாகப்பட்டினம்: சிறுபான்மையினருக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கும் பேராசிரியர் ஜவாஹிருல்லா (மமக - உதயசூரியன்)

கீழ்வேளூர்: மக்கள் போராட்டங்களில் முன்னிற்கும் மாதர் சங்க மாநில துணைத்தலைவர் லதா தங்கம் (சிபிஎம் - அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்).

ஐந்தாண்டு காலச் சாதனைகள் பட்டியல்

மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் திமுக அரசு செய்த பணிகளை முதலமைச்சர் விரிவாகப் பட்டியலிட்டார். மயிலாடுதுறையில் புதிய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 45 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மருத்துவமனை தரம் உயர்த்துதல் மற்றும் சீர்காழி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், மயிலாடுதுறைக்கு மருத்துவக் கல்லூரி மற்றும் சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்குவது அரசின் தீவிரப் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

நாகப்பட்டினத்தைப் பொறுத்தவரை, அக்கரப்பேட்டை மேம்பாலம், புதிய பேருந்து நிலையம், நியோ டைடல் பூங்கா, மற்றும் இசைமுரசு ஹனிஃபா நினைவுப் பூங்கா போன்ற திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதை அவர் குறிப்பிட்டார். "மத நல்லிணக்கத்தின் அடையாளமான நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோயில், சிக்கல் சிங்காரவேலர் கோயில் என அனைத்தையும் காக்கும் அரசாகத் திராவிட மாடல் அரசு உள்ளது" என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

மீனவர் மற்றும் விவசாய நலன்

டெல்டா மாவட்டங்களில் 'வேளாண் தொழில் பெருந்தடம்' அமைக்க விரிவான திட்ட அறிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், மீனவர் நலனுக்காகச் சட்டமன்றத்தில் 576.75 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவித்ததை நினைவுகூர்ந்தார். மேலும், திராவிட மாடல் ஆட்சியில் 4000 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாகவும், அதில் மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டக் கோயில்கள் முக்கிய இடம்பிடித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சிகள் மீது கடும் சாடல்

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகச் சாடிய மு.க.ஸ்டாலின், "கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களை ஏலம் எடுத்து முதலமைச்சரானவருக்கு அந்தப் பதவியில் இருக்கத் தகுதி இல்லை என்று மக்கள் ஏற்கெனவே நிரூபித்துவிட்டனர். தோல்வி பயத்தில் அவர் இப்போது தரமற்ற முறையில் பேசி வருகிறார். 2026 தேர்தல் முடிவுகள் பழனிசாமி என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்து அடியோடு துடைத்தெறியும்," என்றார்.

ஒன்றிய அரசின் மீதான எச்சரிக்கை

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு கொண்டு வரும் மும்மொழிக் கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறைத் திட்டங்களுக்கு அவர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். "தேர்தல் சமயத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்டி தொகுதி மறுவரையறை செய்யத் துடிப்பது தென்மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதனால் வடமாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை அதிகரித்து, தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் உள்ளது" என்று அவர் எச்சரித்தார்.

இறுதியாக, "மீனவர்கள், இளைஞர்கள், உழவர்கள், மகளிர் மற்றும் பக்தர்கள் என யாருக்கும் குறையில்லாமல் இந்த அரசு பணியாற்றியுள்ளது. அந்தத் தெம்போடும் திராணியோடும் உங்களிடம் நான் ஆதரவு கேட்கிறேன்" என்று கூறி, வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

தொகுதி மறுவரையறை: தமிழகத்தின் குரல்

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்கும் 'தொகுதி மறுவரையறை' குறித்துப் பேசிய முதலமைச்சர், "தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்தத் திட்டம் குறித்து கர்நாடக மற்றும் கேரள முதலமைச்சர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமி இது குறித்து வாய் திறக்க மறுக்கிறார். அதிமுகவை பாஜகவிடம் குத்தகைக்கு விட்டுவிட்டதால், தமிழக நலன் குறித்துப் பேச அவருக்குத் துணிவில்லை" என்று சாடினார். திமுக அரசு ஏற்கனவே இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதாரப் புறக்கணிப்பு: ஆதாரங்களுடன் சாடல்

ஒன்றிய அரசு தமிழகத்தைப் பொருளாதார ரீதியாக வஞ்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், 'லைவ் மிண்ட்' (Live Mint) இதழ் வெளியிட்ட செய்தியை ஆதாரமாகக் காட்டினார். "இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு, ஒன்றிய அரசின் டாப் 10 உட்கட்டமைப்புத் திட்டப் பட்டியலில் ஓரிடத்தில் கூட இல்லை. வரி கட்டுவதற்கு மட்டும் தமிழகம் வேண்டும், ஆனால் திட்டங்கள் வழங்க மாட்டார்களா?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னாவிஸ் மதுரையில் பேசியது குறித்துக் குறிப்பிடுகையில், "பாஜகவை ஜெயிக்க வைத்தால் தான் மெட்ரோ தருவோம் என்று பிளாக் மெயில் செய்வது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல" என்றார்.

தேர்தல் அறிக்கை - '2026-ன் சூப்பர் ஸ்டார்'

திமுகவின் தேர்தல் அறிக்கையை 'சூப்பர் ஸ்டார்' என்று வர்ணித்த முதலமைச்சர், அதில் உள்ள "டாப்" அறிவிப்புகளைப் பட்டியலிட்டார்:

இல்லத்தரசி திட்டம்: குடும்பத் தலைவிகளின் வேலைச் சுமையைக் குறைக்க 8,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும். இதன் மூலம் வாஷிங் மெஷின், பிரிட்ஜ், டிவி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை மக்கள் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளில் வாங்கிக் கொள்ளலாம்.

உதவித்தொகை உயர்வு: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கான உதவித்தொகை 1,500 ரூபாயாக அதிகரிக்கப்படும். முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும்.

விவசாயிகள் & மீனவர் நலன்: நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு 3,500 ரூபாய் ஆகவும், கரும்பு டன் ஒன்றுக்கு 4,500 ரூபாய் ஆகவும் உயர்த்தப்படும். மீன்பிடித் தடைக்கால நிவாரணம் 12,000 ரூபாய் ஆக அதிகரிக்கப்படும்.

இளைஞர் நலன் & வீட்டு வசதி: 5 லட்சம் இளைஞர்களுக்கு 'நான் முதல்வன் 2.0' மூலம் 1,500 ரூபாய் உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். 'கலைஞர் கனவு இல்லம்' திட்டம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும்.

டெல்டா 2030 மாஸ்டர் பிளான்

டெல்டா மாவட்டங்களின் வளர்ச்சிக்காக 2030-க்குள் விரைவுச் சாலைகள், திருச்சியில் உலர் துறைமுகக் கட்டமைப்பு மற்றும் 'தூய்மை காவிரி திட்டம் 2030' போன்ற மெகா திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்.

"நாங்கள் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கிறோம், இது திராவிட மாடல். ஆனால் பொய்களை மட்டுமே சொல்வது அடிமை பழனிசாமி மாடல்" என்று குறிப்பிட்ட அவர், உதயசூரியன், கை மற்றும் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் ஆகிய சின்னங்களில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களுக்குப் பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.