மயிலாடுதுறை: தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் பணிகளானது மிக வேகமாகவும், முறையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடனும் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான (EVM) பாதுகாப்பு அறையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ. ஸ்டாலின் ஆகிய இருவரும் கூட்டாக இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கணினி முறையில் முதற்கட்ட ஒதுக்கீடு
கடந்த மார்ச் 23-ம் தேதி (23.03.2026) அன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கணினி மென்பொருள் செயலி (Randomization) வாயிலாக சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கும் பணி நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒதுக்கீட்டுப் பணியைத் தொடர்ந்து, அந்தந்தத் தொகுதிகளுக்கு உரிய இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
தொகுதி வாரியான இயந்திரங்கள் விவரம்
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேவையான இயந்திரங்கள் தற்போது பாதுகாப்பாக அந்தந்தப் பகுதி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
* மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதியில் 363 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Units), 363 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (Control Units) வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும்,
* சீர்காழி சட்டமன்றத் தொகுதியில்| 366 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Units), 366 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (Control Units) வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும்,
* பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 410 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Units), 410 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் (Control Units) தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் வைக்கப்பட்டுள்ளது.
மூன்றடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு
மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பாதுகாப்பு அறையின் கதவுகள் முறையாகச் சீலிடப்பட்டுள்ளதா என்பதையும், அங்குள்ள பதிவேடுகளையும் சரிபார்த்தனர்.
"தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் அனைத்தும் 24 மணி நேரமும் சிசிடிவி (CCTV) கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்த நேரடி ஒளிபரப்பைக் கண்காணிக்கத் தனியாகத் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய காவலர்கள் சுழற்சி முறையில் (Shift System) இரவு பகலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரங்கம்பாடியில் தொடர் ஆய்வு
மயிலாடுதுறையைத் தொடர்ந்து, தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள பூம்புகார் தொகுதிக்குட்பட்ட 410 வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்புத் தன்மையைக் கேட்டறிந்தார். இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தீயணைப்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளனவா என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.
அதிகாரிகள் பங்கேற்பு
இந்த ஆய்வின்போது, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கீதா, வட்டாட்சியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.
தேர்தல் அமைதியாகவும், வெளிப்படையாகவும் நடப்பதை உறுதி செய்யும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
