இந்தியாவே எதிர்பார்க்கும் மக்களவை தேர்தலுக்கான தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. எந்த கட்சி யாருடன் கூட்டணி அமைக்க போகிறது. எந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸுக்கு ஆதரவு அளிக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க போகிறார் என்பதும் இங்கே அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. தற்போது, தமிழ்நாடு காங்கிரஸ் - திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 


மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் தற்போது பிஸியாக இருந்து வருகிறார். இயக்குநர் மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துக்கொண்டே நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளிலும் மேற்கொண்டு வருகிறார். 


மீண்டும் வெளிநாடு கிளம்பும் கமல்ஹாசன்: 


கடந்த 19ம் தேதி நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். அதன்பிறகு, கடந்த 21ம் தேதி ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு விழாவில் பங்கேற்றார். அப்போது, மக்கள் நீதி மய்ய கட்சி யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்ற பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 


இதையடுத்து, செய்தியாளர்கள் கூட்டணி குறித்து நடிகர் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், கூட்டணி தொடர்பாக பேச்சு நடத்தி வருவதாகவும், விரைவில் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்தார். 


யாருடன் கூட்டணி வைக்க போகிறார் கமல்ஹாசன்..? 


கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன், தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. முன்னதாக, ஈரோடு இடைத்தேர்தலில் தனது கட்சி சார்பில் போட்டியிடபோவது இல்லை என்றும், காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த ஒரு மாதம் முன்பு நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். எனவே, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வேட்பாளர் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. 


நாளை கூட்டணி அறிவிப்பா..? 


வருகின்ற 29ம் தேதி நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் ’தக் லைஃப்’ படப்பிடிப்பிற்காக மீண்டும் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நாளை மறுதினம் சென்றுவிட்டு வருகின்ற மார்ச் 10ம் தேதிதான் கமல்ஹாசன் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், நாளை (பிப்ரவரி 28) திமுக - மக்கள் நீதி மய்ய கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்து ஆகலாம் என்றும், தொகுதி பங்கீடு குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 


காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறதா அல்லது திமுகவுடன் நேரடியாக கூட்டணி அமைக்கிறதா என்று தெரியவில்லை. இருப்பினும், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த ஒரு தொகுதியிலும் கமல்ஹாசனே போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது. 


அவ்வாறு கமல்ஹாசன் போட்டியிட்டால் மத்திய சென்னை அல்லது கோவையில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.