நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்கள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை கூறி வார்டு மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 100 வார்டுகளை கொண்ட மதுரை மாநகராட்சியில் போட்டிகள் கடுமையாக உள்ளது. இதனால் அமைச்சர் பி.மூர்த்தி ஒருபகுதியிலும், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனும் தங்களது ஆதரவாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் மேலூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட வல்லாளபட்டி பேரூராட்சியில் அமைச்சர் பி.மூர்த்தி சில முக்கிய தகவல்களையும் பேசியுள்ளார். “ஜவஹர்லால் நேரு குடும்பம் தொடங்கி வாரிசு அரசியல் உள்ளது : உள்ளாட்சித் தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார்” எனவும் பேசியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வல்லாளப்பட்டி பேரூராட்சியில் தி.மு.கவின் தேர்தல் அலுவலகத்தை பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி இன்று திறந்து வைத்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசினார். அப்பொழுது திராவிட கழகத்தை நிர்வகிக்கப் போவதும், இரண்டு மூன்று மாத காலத்தில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் போகிறார் என கூறிய அவர் ,தி.மு.க அரசுதான் நீங்கள் கேட்ட அனைத்தையும் செய்து கொடுக்கும், அடிப்படை தேவைகளை தி.மு.க அரசு தான் நிறைவேற்றும், இத்தனை ஆண்டுகாலம் செய்யாதவர்கள் இனி எப்படி செய்வார்கள் எனவும் பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும் நீங்கள் வாரிசு அரசியலை முன்மொழிகிறீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தியிலிருந்து தொடங்கி எடப்பாடி பழனிச்சாமியின் மகன், ஓ.பி.எஸ் மகன், ஜெயக்குமார் மகன் வரை வாரிசு அரசியல் தான் இருக்கிறது. ஆனால் அதிகமாக உழைத்ததால் ஸ்டாலின் முதலமைச்சர் ஆனது போன்று சிறு வயதிலிருந்தே உதயநிதி ஸ்டாலின் உழைக்கிறார். அதற்கான பலனைப் பெறுவார் என்றும் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி பதில் அளித்தார். இந்நிகழ்வில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - watch video | டீ போட்டு கொடுத்தும், பூ கட்டி கொடுத்தும் மாஸ் காட்டும் மதுரை வேட்பாளர்கள்