Lok Sabha Election phase 4 Polling: ஜம்மு & காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் 1998ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவிற்கு வாக்குகள் பதிவாகியுள்ளன.  

நான்காம் கட்டத்தில் 64% வாக்குகள் பதிவு:

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், 3 கட்ட வாக்குப்பதிவானது கடந்த ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. அதைதொடர்ந்து நேற்று 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 96 மக்களவை தொகுதிகளில் நான்காவது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திரா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் பல அரங்கேறிய நிலையில், நான்காம் கட்டத்தில் மொத்தமாக சுமார் 64 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக மேற்குவங்க மாநிலத்தில் 76.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மாநில வாரியான வாக்குப்பதிவு விவரங்கள் (துல்லியமான விவரங்களை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும்)

மாநிலம்/யூ.டி வாக்குப்பதிவு சதவிகிதம் (ஒட்டுமொத்தம்: 64.13%)
ஆந்திரப் பிரதேசம் 68.32%
பீகார் 56.87%
ஜம்மு & காஷ்மீர் 37.93%
மத்திய பிரதேசம் 70.68%
மகாராஷ்டிரா 57.84%
ஒடிசா 64.81%
தெலங்கானா
62.28%
உத்தரப்பிரதேசம் 58.05%
மேற்கு வங்கம்
76.68%
ஜார்கண்ட் 64.59%

 ஸ்ரீநகரில் 1998க்குப் பிறகு அதிக வாக்குப்பதிவு:

ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் தொகுதியில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில்,  37.93% வாக்குகள் பதிவாகின.  1998ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு அங்கு பதிவான அதிகபட்ச வாக்குகள் இதுவாகும். முன்னதாக 1996ம் ஆண்டில் 40.94 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், 1998ல் 30.06 சதவிகிதமும், 1999ல் 11.93 சதவிகிதமும், 2004ல் 18.57 சதவிகிதமும், 2009ல் 25.55 சதவிகிதமும், 2014ல் 25.86 சதவிகிதமும் மற்றும் 2019ல் 14.43 சதவிகித வாக்குகளும் மட்டுமே பதிவாகி இருந்தது குற்ப்பிடத்தக்கது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு பள்ளத்தாக்கில் நடந்த முதல் பொதுத் தேர்தல் இதுவாகும். ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் அப்துல்லா குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினர் வாக்களித்த நிலையில்,  வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது.

ஆந்திரா, மேற்குவங்கத்தில் வன்முறை:

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பர்தா அணிந்து வந்த இஸ்லாமிய பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக, பாஜக வேட்பாளர் மாதவி லதா மிது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆந்திராவில் பல்நாடு, கடப்பா மற்றும் அன்னமய்யா மாவட்டங்களில், தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே மோதல் வெடித்தது. கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில், பூத் ஏஜெண்டுகள் கடத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது. சில பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்கள் கைப்பற்றப்பட்டு, கள்ள ஓட்டு போடப்பட்டதாகவும் இரண்டு பிரதான கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொண்டன.

மேற்கு வங்கத்தில் பிர்பூம் மற்றும் பர்தாமான்-துர்காபூர் மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில்,  பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ்  தொண்டர்கள் மோதிக்கொண்டதால் ஆங்காங்கே வன்முறை ஏற்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரம் செயலிழப்பு மற்றும் வாக்குப்பதிவு முகவர்களைத் தடுத்தது என மொத்தம் 1,088 புகார்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது,

அடுத்தகட்ட தேர்தல்:

நான்காம் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முறையே 66.14 சதவீதம், 66.71 சதவீதம் மற்றும் 65.68 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்த கட்ட வாக்குப்பதிவு மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடபெற உள்ளது.