Lok sabha Election 2024: இன்னும் ஒரு மாசம்தான்! தொடர் இழுபறியில் அ.தி.மு.க. கூட்டணி - என்ன நடக்கிறது?

Lok sabha Elections: மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க.வின் கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் நீடித்து வருகிறது.

Continues below advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத்திலே தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால், நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

Continues below advertisement

முதல் கட்டத்திலே தமிழ்நாட்டிற்கு தேர்தல்:

தமிழ்நாட்டின் ஆளுங்கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. சில கட்சிகள் மட்டுமே எந்தெந்த தொகுதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில்,  மீதமுள்ள கட்சிகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக தங்கள் போட்டியிடும் தொகுதிகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுங்கட்சி தங்களது கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் சுறுசுறுப்பாக உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் கூட்டணி நிலவரம் இதுவரை இழுபறியாக உள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், வி.சி.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என பெரிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை எந்த பெரிய கட்சிகளும் இடம்பெறவில்லை.

இழுபறியில் அ.தி.மு.க. கூட்டணி:

அ.தி.மு.க. தங்கள் கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வை இடம்பெறச் செய்ய தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், அவர்களது பேச்சுவார்த்தைக்கு இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. பா.ம.க.வை தங்கள் கூட்டணியில் இடம்பெற பா.ஜ.க.வும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

தே.மு.தி.க. தலைவராக பதவி வகித்து வந்த கேப்டன் விஜயகாந்த், கடந்தாண்டு இறுதியில் காலமானதால் தே.மு.தி.க. தங்கள் கூட்டணியில் இடம்பெற்றால் விஜயகாந்திற்கான அனுதாப வாக்குகள் தங்கள் பக்கம் கிட்டும் என்று அ.தி.மு.க. கருதுகிறது. இதனால், தே.மு.தி.க.வை தங்கள் பக்கம் இழுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், ராஜ்யசபா மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களவைத் தொகுதிகள் உள்ளிட்ட காரணங்களால் தே.மு.தி.க.வுடனான தங்கள் கூட்டணியை உறுதி செய்வதில் அ.தி.மு.க.விற்கு சிக்கல் உள்ளது.

பா.ம.க., தே.மு.தி.க. யார் பக்கம்?

தமிழ்நாட்டிற்கு மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், தற்போது அ.தி.மு.க. கூட்டணியை விரைந்து உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த சூழலில், தே.மு.தி.க. 40 தொகுதிகளிலும் போட்டியிட தனது கட்சி நிர்வாகிகளிடம் இருந்து விருப்பமனு பெறுவதாக அறிவித்துள்ளது. இது தே.மு.தி.க. தனித்துப் போட்டியிட இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மறுமுனையில் பா.ம.க. பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதும் அ.தி.மு.க.விற்கு பின்னடைவாக உள்ளது.

தென் மாநிலங்களில் சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிகளவில் இருப்பதால் வட தமிழகத்தில் தே.மு.தி.க., பா.ம.க. கூட்டணியில் இடம்பெற்றால் தி.மு.க.விற்கு அ.தி.மு.க.வால் சவால் அளிக்க முடியும். இதனால், அ.தி.மு.க.விரைவில் தங்கள் கூட்டணியில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை கொண்டு வர தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மேலும் படிக்க: Lok Sabha Election 2024: முடிவுக்கு வரும் ராகுலின் யாத்ரா - மும்பையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - பங்கேற்கிறார் ஸ்டாலின்

மேலும் படிக்க: Lok Sabha Election 2024: மக்களவைத் தேர்தல் - எப்படி நடைபெறும்? விதிகளும், நடைமுறைகளும் என்ன?

Continues below advertisement
Sponsored Links by Taboola