நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் புரூஸை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் ரசூல் மைதீன் தலைமையில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.


பா.ஜ.க. அநியாயம்:


அப்போது பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பேசுகையில், இன்று தேர்தலுக்காக வலம் வரும் ஒரு கூட்டம் கூட்டணி முறிந்து விட்டது. இனி எந்த காலத்தில் இணைய மாட்டோம் என பேசி வருகின்றனர். மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் நடந்த அநியாயம் அக்கிரமம் கொடுங்கோலுக்கு துணை நின்ற அதிமுக மீது பாஜகவின் காவிக்கரை இன்னும் படிந்துள்ளது என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. சிந்தித்து வாக்களிக்க வேண்டும். டெல்லியில்  பெருநாள் பண்டிகை கொண்டாடச் சென்ற சுனைஹான் என்ற இளைஞர் அடித்துக் கொல்லப்படுகிறார், இதுகுறித்து திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் காட்டமாக அறிக்கை விடுகின்றனர். ஆனால் அதிமுக வாய் திறக்கவில்லை. பைலுக்கான் என்ற மாட்டு வியாபாரி அடித்து கொலை செய்யப்படுகிறார்.  ஜம்மு காஷ்மீரில் எட்டு வயது சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படுகிறார். இந்தியாவே கொதித்து எழுந்தது, இதற்கு இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் எல்லாம் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் அதிமுக மோடி ஆட்சியில் நடந்த இந்த கொடூரம் குறித்து வாய் திறக்கவில்லை.


கல்வி உதவித்தொகை:


கொரோனா காலத்தில் தப்லிக் ஜமாஅத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் தான் கொரோனாவை பரப்பினார்கள் என்று அதிமுக அரசு அவர்களை கைது செய்தது. அப்போது அவர்களுக்கு ஜாமீன் வழங்கிய போதும் அவர்களை வெளியிடாமல் சிறைகுள்ளேயே வைத்து வதைத்ததை மறக்க முடியாது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக அதிமுகவும் பாட்டாளி மக்கள் கட்சியும் வாக்களித்ததன் காரணமாக தான் இந்தச் சட்டம் இன்று  நிறைவேறி உள்ளது. இப்படி செயல்பட்ட அதிமுகவுடன் சிலர் இன்று இணைந்து கொண்டு இதனை எல்லாம் மறந்து விட்டு வெட்கமில்லாமல் பேசி வருகின்றனர்.


ஒன்றிய அரசு ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கான சலுகையை ரத்து செய்தது. ஆனால் தமிழகத்தில் மக்கள் பேருந்தில் இலவச பயணம் செல்கிறார்கள். அது போன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்தியது. தற்போது முதல்வர் மு க ஸ்டாலின் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழக அரசு அந்த உதவி தொகை வழங்கும் என அறிவித்துள்ளார்கள். அதோடு மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என இருவரையும் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து அவர்களிடம் நேரடியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இது இந்தியாவில் எந்த முதல்வர்களும் செய்யாத ஒரு சாதனையாகும்.


பா.ஜ.க.வினர் வல்லவர்கள்:


உத்தரகாண்டில் சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட 42 தொழிலாளர்களை மீட்க முடியாமல் ஒன்றிய அரசுத் திணறிய போது டெல்லியைச் சேர்ந்த  ஹாசன் என்பவருடைய குழு 42 பேரையும் மீட்டது. ஆனால் அவரது வீடு ஆக்கிரமிப்பில் உள்ளது என கூறி அவரது வீட்டை இடித்து அவரை குடும்பத்தோடு நடுத்தெருவில் வந்து நிற்க வைத்தது மோடி ஆட்சி. இன்று பிரதமர் மோடி பலமுறை தமிழகத்திற்கு வந்து செல்கிறார். நெல்லை, தூத்துக்குடி பெரும் வெள்ளத்தில் பாதித்த போது தமிழக மக்களை வந்து பார்க்கவில்லை.  ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்திற்கு தேவையான நிதி திட்டங்களை தந்து கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார். பாஜகவினர் எண்ணெய்  இல்லாமல் வடை சுடுவதில் வல்லவர்கள். 


ஆகவே மோடியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளை தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். மோடி தங்களை ஊழலுக்கு எதிரான ஆட்சி என கூறிக் கொள்கிறார். துவாரகா இணைப்பு சாலையில் 250.77 கோடி ஊழல் இதை நாங்கள் சொல்லவில்லை சிஏஜி அறிக்கை கூறுகிறது. அதுபோன்று 6500 கோடி தேர்தல் பத்திர ஊழல். இந்த ஊழல் உலகத்தில் எங்கும் நடக்காத மெகா ஊழல் ஆகும். எனவே ஊழல் பற்றி பேசுவதற்கு பாஜகவிற்கு அருகதை கிடையாது. வட மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக  பேரலை வீசுகிறது. அங்கு 39 பாஜக வேட்பாளர்கள் களத்தில் இருந்து ஓடி விட்டார்கள். இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் எனக் கூறினார்