Lok Sabha Election Phase 7: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச், சேர்ந்த 57 தொகுதிகளில் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


ஏழாம் கட்ட வாக்குப்பதிவு:


நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலில், ஏற்கனவே 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், 90 சதவிகித தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு வரும் ஜுன் 1ம் தேதி ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


அது நிறைவடைந்ததும், 7 கட்டங்களாக பதிவான வாக்குகளும், மொத்தமாக ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.  இந்த கட்டத்தில் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், கடைசி கட்ட தேர்தல் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.


இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை:


தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் அடங்கிய I.N.D.I.A. கூட்டணி இடையேயான கருத்து மோதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தங்களது கூட்டணி வந்தால் என்ன மாதிரியான திட்டங்கள் கொண்டு வரப்படும், நாட்டின் வளர்ச்சிக்கான கைவசம் உள்ள திட்டங்கள் தொடர்பாக வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். அதற்கும் மேலாக மத அரசியலும், பிரிவினை வாதம் தொடர்பான பேச்சுகளும் தேர்தலில் அதிகம் காணப்படுகின்றன. இந்நிலையில் தான், நாடாளுமன்ற தேர்தலின், கடைசி கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரை இன்று மாலை 6 மணியளவில் முடிகிறது. கடைசி நாளான இன்று, அதிகப்படியான வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேரிக்க வேட்பாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.


57 தொகுதிகளின் விவரங்கள்:


தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச், சேர்ந்த 57 தொகுதிகளில் கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் பீகாரைச் சேர்ந்த 8 தொகுதிகள், சண்டிகரைச் சேர்ந்த ஒரு தொகுதி, இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 4 தொகுதிகள், ஜார்கண்டைச் சேர்ந்த 3 தொகுதிகள், ஒடிஷாவைச் சேர்ந்த 6 தொகுதிகள், மேற்குவங்கத்தைச் சேர்ந்த 9 தொகுதிகள், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலா 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


களத்தில் 904 வேட்பாளர்கள்:


57 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட மொத்தம் 2,105 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. பரிசீலனைக்குப் பின் 954 மனுக்கள் செல்லத்தக்கவையாக  ஏற்கப்பட்டன. அதிகபட்சமாக பஞ்சாபில் 13 மக்களவைத் தொகுதிகளில் 598 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  இதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தின் 13 மக்களவைத் தொகுதிகளில் 495 மனுக்கள் தாக்கலாகின. பீகாரில் உள்ள ஜஹனாபாத் மக்களவைத் தொகுதியில் அதிகபட்சமாக 73 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், பஞ்சாபின் லூதியானாவில் 70 மனுக்கள் பெறப்பட்டன.


நட்சத்திர வேட்பாளர்கள்:


பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். இமாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத், ஹமிர்புர் தொகுதியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர்.


இதுவரை பதிவான வாக்குகள்:


இதுவரை ஆறுகட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. அதன்படி, முறையே 66.14 சதவிகிதம், 66.71 சதவிகிதம் 65.68 சதவிகிதம், 69.16 சதவிகிதம், 63 சதவிகிதம் மற்றும் 61.22 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டிலும் விளவங்கோடு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த அனைத்து தேர்தல்களின் முடிவுகளும், வரும் ஜுன் 4ம் தேதி வெளியிடப்பட உள்ளன.