Lok Sabha Phase 3 Polling: நாடாளுமன்ற  மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு, பெரிய பிரச்னைகள் எதுவும் இன்றி சுமூகமாக நடந்து முடிந்துள்ளது.


64.4% வாக்குப்பதிவு:


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில், நேற்று இரவு 8 மணி நிலவரப்படி தோராயமாக 64.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அசாமில் அதிகபட்சமாக 75.26 சதவிகித வாக்குகளும், கோவாவில் 74.27 சதவிகித வாக்குகளும், மேற்கு வங்கத்தில் 73.93 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிராவில் 54.77 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன, பீகார் மற்றும் குஜராத்தில் தலா 56 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.  பீகார் மற்றும் குஜராத்தில் தலா 56 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. உத்தரபிரதேசத்தில் 57.34 சதவிகிதமும், மத்தியபிரதேசத்தில் 63.09 சதவிகித வாக்குகளும், கர்நாடகாவில் 67.76 சதவிகித வாக்குகளும், சத்திஸ்கரில் 66.99 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.







மூன்றாம் கட்டமாக 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் இரண்டு கட்டங்களாக 543 தொகுதிகளில் 189 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. அடுத்த நான்கு கட்டங்கள் மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. 


குஜராத் நிலவரம்:


பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும் நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பிரதமர் மோடியும் காலையிலேயே அகமதாபாத்தில் வாக்களித்துவிட்டு,  பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆனால், அங்கு வெறும் 58.98 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.


மேற்குவங்கத்தில் சிறிய மோதல்:


மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மற்றும் ஜாங்கிபூர் தொகுதிகளின் பல்வேறு பகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக மற்றும் காங்கிரஸ்-சிபிஐ(எம்) தொண்டர்கள் மோதிக்கொண்டதால், ஆங்காங்கே சிறிய வன்முறைகள் ஏற்பட்டன.  முர்ஷிதாபாத்தில் அதிகபட்சமாக 76.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து மல்தஹா தக்ஷின் (73.68%), மல்தஹா உத்தர் (73.30%), ஜாங்கிபூர் (72.13%) பதிவாகியுள்ளன. மொத்தமாக மேற்கு வங்கத்தில் 75.79 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளது. 


மகாராஷ்டிரா:


மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 11 தொகுதிகளில் 61.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவில் 62 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் அதிகாரிகளால் பகிரப்பட்ட தரவுகளின்படி, கோலாப்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 63.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் அரசியல் செல்வாக்கு மிக்க பவார் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கடும் மோதலில் ஈடுபட்டிருந்த பாராமதி தொகுதியில் குறைந்தபட்சமாக 47.84 வாக்குகள் பதிவாகியுள்ளன.