தென்காசி தொகுதியில் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்றக்கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பிரச்சாரம் மேற்கொள்ள வந்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் பொழுது, "தமிழ்நாட்டின் வளர்ச்சி தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் விரோத ஊழல் ஆட்சியை ஒழிப்பதற்கு முன்னோட்டமாக இந்த தேர்தலில் மோடி தலைமையிலான கூட்டணிக்கு வாய்ப்பளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் சிறப்பாக தேர்தல் பணியாற்றுகிறோம். மக்கள் வரவேற்பு பிரகாசமாக உள்ளது. எனவே வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளது. மோடி தலைமையிலான கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் தான் இன்று போட்டி உள்ளது. அதிமுக இந்த தேர்தலில் நிற்பது திமுகவுடன் கள்ளக்கூட்டணி வைத்திருக்கிறது என்று சொல்கிறேன். தமிழகத்தில் ஆளும் திமுகவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர். எதிரான வாக்குகளெல்லாம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் வரப்போகிறது. அதை தடுத்து எதாவது ஓட்டுகளை பிரித்தெடுத்து ஸ்டாலினுக்கு வெற்றி வாய்ப்பை தர வேண்டும். அப்போது தான் அவர்கள் மீது வழக்கு போடாமல் இருப்பார்கள் என்ற சுயநலத்தால் உருவான கள்ள கூட்டணி.


சீமானை கேட்க சொல்லுங்கள்.


நாம் தமிழர் கட்சி தலைவர் மிகவும் கோபமாக, ஆக்ரோசமாக பேசியிருக்கிறார். முதலில் அவர் கோபப்பட்டு பேசுவது சரியா என்று யோசிக்க வேண்டும். நான் ஒன்றும் அவருக்கு சின்னம் கிடைக்கவில்லை என்று சொல்லவில்லை. பேட்டியின் போது அவர்கள் சொன்ன கருத்துக்கு மறுகருத்து தான் சொன்னனே தவிர சீமானுக்கு அந்த சின்னம் கொடுக்கக்கூடாது என்று சொல்லவில்லை என்று அதற்கு விளக்கம் அளித்து பேசினார். சின்னம் கொடுக்கக்கூடாது என்று நான் சொன்னதாக கோபத்தில் பேசியது தவறு. அதே போல எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களையெல்லாம் அடைத்து வைத்திருந்ததாக காழ்ப்புணர்ச்சியில் பேசுகிறார். அது ஒரு வன்மமாக தெரிகிறது. அவர்களா போய் ரிசார்ட்டில் இருந்தார்களே தவிர யாரையும் அடைத்து வைக்கவில்லை. அது தான் உண்மை. வேறு ஏதேனும் கேள்வி இருந்தால் சீமானை கேட்க சொல்லுங்கள். கோபத்தில் வார்த்தைகளை கொட்டிவிட்டு அதனை எடுக்க முடியாது.


என்னை பொருத்தவரை தீய சக்தி திமுக ஒன்று தான் எதிரி. எங்களது துரோகிகள் அம்மா கட்சியை  பறித்து வைத்துள்ளனர். அவர்களிடமிருந்து அதனை மீட்டெடுக்க வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. சீமான் அவர்களையோ மற்ற கட்சிகளையோ தாக்கி பேசுவதை நீங்கள் பார்க்க முடியாது. தேர்தல் ஆணையம் செய்தது தவறில்லை என்று சொல்கிறேன், அதற்காக சீமானுக்கு சின்னம் கிடைக்காதது மகிழ்ச்சி என்று நான் சொல்லவில்லை, அதனால் அவர் அதை புரிந்து கொள்ள வேண்டும், அதற்காக வாய் புளித்தது மாங்காய் புளித்தது என்று பேசுவது தவறு இதற்கு மேல் அவர் அரசியலுக்காக பேசினார் என்றார் அதனை ஓரம் கட்டி விட்டு  நம்ம வேலையை பார்க்கலாம்" என்றார்.


மதுக்கடைகளை மூடுவதற்கு சாத்தியம் உள்ளது


தொடர்ந்து, பிரதமர் தமிழகத்தில் டெபாசிட் கூட வாங்க முடியாது என்று உதயநிதி பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மோடி உலகமே பார்த்து வியக்கும்  தலைவர். 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். அவர் செய்த சாதனைகள் என்ன, 3வது முறையாக பிரதமராக வரப்போகிறார். அவர போய் தம்பி உதய நிதியெல்லாம் பேசுவது?? கருணாநிதியின் பேரன் என்பதற்காக அவர் பேசுவது அவர் வயதிற்கு அழகல்ல என்றார்.


தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடுவதற்கு சாத்தியம் உள்ளது. நீங்கள் NDA கூட்டணியில் ஆட்சியை கொடுங்கள் செய்து காட்டுகிறோம் என்றார். தொடர்ந்து தேர்தல் பத்திரம் கொடுத்து பாஜகவை கி வீரமணி விமர்சித்து பேசியது குறித்த கேள்விக்கு கி வீரமணி அம்மா ஆட்சியில் இருந்தால் எங்களுக்கு ஆதரவாக இருப்பார், இப்போது திமுக ஆட்சியில் உள்ளது. அம்மாவுக்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்தவர்.. அதான் பிரதமரே எந்த எந்த கட்சிக்கு எவ்வளவு பணம் வந்திருக்கிறது என்று மக்களுக்கு தெரிய வந்துள்ளது தானே? அதனால் அதில் என்ன தவறு இருக்கிறது என தெரியவில்லை, பாராளுமன்றத்தில் சட்டத்தை இயற்றி தான் கொண்டு வந்துள்ளனர். அதை மத்தியா அரசாங்கள் பார்த்துக் கொள்ளும் என்று பேசினார்.