PM Modi's nomination: பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில், தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார்.


பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இதையொட்டி இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மோடி வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோர் இருந்தனர். இன்று  கங்கா சப்தமியுடன் புஷ்ய நட்சத்திரமும் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நாளில் எந்த ஒரு வேலை செய்தாலும் ஒருவரின் விருப்பம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.






பிரதமர் மோடி வழிபாடு:


வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக, வாரணாசியில் உள்ள தசாஸ்வமேத் காட்டில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார்.






வாரணாசியில் ஜுன் 1ம் தேதி வாக்குப்பதிவு:


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் கடைசி கட்டமாக ஜுன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு முதல்முறையாக நரேந்திர மோடி, வாரனாசி தொகுதியில் போட்டியிட்ட போது 5 லட்சத்து 81 ஆய்ரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில், 6 லட்சத்து 74 ஆயிரம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் மோடி ரோட் ஷோ:


முன்னதாக நேற்று வாரணாசி சென்றடைந்த பிரதமர் மோடி 6 கிமீ தூரத்திற்கு ரோட் ஷோ நிகழ்த்தினார். லங்கா பகுதியில் உள்ள மாளவியா சௌராஹாவில் இருந்து தொடங்கிய ரோட் ஷோ, பல்வேறு பகுதிகள் வழியாகச் சென்று காசி விஸ்வநாத் தாமில் முடிவடைந்தது. இதில் காவி உடையணிந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இசைவாத்தியங்கள் முழங்கியும், மலர்களை தூவியும் பாஜக தொண்டர்கள் மோடியை வரவேற்றனர்.