முத்தரையர் சமூகத்தை சேர்ந்த 200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வித் திட்டத்தில் இடம் ஒதுக்கப்படும் எனவும், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையருக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்றும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர் உறுதி அளித்தார்.


ஏழு கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. முதல் கட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐ.ஜே.கே. கட்சி பெரம்பலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டது. 


ஐ.ஜே.கே. தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம்


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு  உட்பட்ட கரூர் மாவட்டம் குளித்தலை சுங்கவாயில் அருகே தமிழர் தேசம் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவரான கே.கே.செல்வகுமார் ஏற்பாடு செய்திருந்த  பொதுக்கூட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பெரம்பலூர் மக்களவைத் தொகுதி  ஐ.ஜே.கே வேட்பாளர்  பாரிவேந்தர், கட்சியை வலுப்படுத்தவும், அடையாளம் காணச்செய்யவும் தேர்தல் நேரத்தில் சரியான முடிவை தமிழர் தேசம் கட்சியின் நிறுவன தலைவரான கே.கே.செல்வகுமார் எடுத்திருப்பதாகத் தெரிவித்தார். 


தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்பது பெருமைக்குரிய விஷயம் எனக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் முத்தரையர்கள் பெரிய அளவில் இருந்து கொண்டு, அரசியல் அடையாளம் இல்லாமல், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு கொடி பிடித்துக்கொண்டு, சேவகம் செய்த நிலை மாறவேண்டும் என பாரிவேந்தர் பேசினார். அதற்காக சரியான நேரத்தில் தமிழர் தேசம் கட்சியை தலைவர் கே.கே.செல்வக்குமார் ஆரம்பித்திருக்கிறார். நாட்டை பிரதமர் மோடி சிறப்பாக ஆட்சி செய்து வருவதால், உலக நாடுகள் இந்தியாவை பெருமையோடு பார்க்கிறது என புகழாரம் சூட்டினார். தேர்தலில் வெற்றிபெற்ற உடன், தமிழர் தேசம் கட்சி சார்பில் முன்வைத்த இரண்டு கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றித் தருவேன் என வாக்குறுதி அளித்தார்.


தனது சொந்த நிறுவனங்கள் மூலம் கிடைத்த வருவாயிலிருந்து கடந்தமுறை ஏழை - எளிய குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 200 மாணவர்களுக்கு இலவச உயர்கல்வியை வழங்கியதாக சுட்டிக்காட்டிய  பாரிவேந்தர், அதில் படித்த மாணவர்கள் பொறியாளர்களாக, வணிக மேலாண்மை, வேளாண் பொறியியல், சட்டம் உள்ளிட்ட துறைகளில் படித்து பட்டம்பெற்று முன்னேறி இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.


இந்தமுறையும் இலவச உயர்கல்வித் திட்டம் தொடரும் எனத் தெரிவித்த பாரிவேந்தர், அதில் முத்தரையர் சமூகத்தை சேர்ந்த 200 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்படும் என உறுதி அளித்தார். மேலும், மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையருக்கு வெண்கலச் சிலை அமைத்துக் கொடுப்பேன் எனவும் பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார்.


குன்னம் பகுதியில் தேர்தல் பரப்புரை


பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பேருந்து நிலையம் பகுதியில்,  சிதம்பரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் கார்த்தியாயினியை ஆதரித்து, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவருக்கு  தேசிய ஜனநாயக கூட்டணியினர் உற்சாக வரவேற்பு அளித்தார். தொடர்ந்து பேசிய அவர்,இந்தத் தொகுதியில் பார்க்கவ குல சமுதாயம் ஒன்றரை லட்சம் வாக்குகள் கொண்டது என குறிப்பிட்டார். பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். திமுக ஒரு அடிமை கூடாரம் என்றும்,  அதில் 15 ஆண்டு காலமாக திருமாவளவன் ஏன் தொற்றிக் கொண்டு உள்ளார் என்றும் பாரிவேந்தர் கேள்வி எழுப்பினார். நீட் என்ற மந்திர வார்த்தையை கூறி தமிழக மக்களை ஏமாற்றி திமுக ஆட்சி செய்து கொண்டு இருப்பதாக பாரிவேந்தர் விமர்சித்தார்.