சரத்குமார் தேர்தலில் நிற்க மாட்டேன் என முதலிலேயே சொல்லி விட்டார் என நேர்காணல் ஒன்றில் விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். 


2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. 40 தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரைகள் எல்லாம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் விருதுநகர் தொகுதி இந்த முறை ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது. அங்கு காங்கிரஸ் சார்பில் மாணிக் தாகூர், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் களமிறங்குகின்றனர். 


இதில் ராதிகா சரத்குமார் அளித்துள்ள நேர்காணல் ஒன்றில், “விருதுநகர் தொகுதியை பொறுத்தவரை மக்கள் என்ன தேவை என புரிந்து கொள்கிறார்கள். விருதுநகர் தொகுதியை நாங்கள் தேர்வு செய்யவில்லை. தலைமை சொன்னதால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டோம். இந்த ஊரில் எங்கள் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அரசியல் ரீதியான விஷயங்கள் எல்லாம் இங்கே செய்திருக்கிறோம். அதனால் இந்த தொகுதி எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு ஒரு பிரச்சினை இருக்கு.


அதனை எல்லாம் கவனத்தில் கொண்டுள்ளோம். சரத்குமார் தேர்தலில் நிற்க மாட்டேன் என முதலிலேயே சொல்லி விட்டார். அவரை மாதிரி 16 வருடங்கள் சமத்துவ மக்கள் கட்சியை தொடர்ந்து நடத்தியிருக்க முடியாது. ஒன்றிரண்டு வருடங்கள் மட்டுமே இருந்திருப்பார்கள். கட்சியை நடத்த வேண்டும் என்றால் செயல்படக்கூடிய இடத்தில் இருக்க வேண்டும். 


இப்போது அரசியல் பார்வை என்பது மாறிவிட்டது. கருணாநிதி குடும்பத்தை நான் என்னுடைய குடும்ப உறுப்பினராக இருந்தேனே தவிர சமக-வில் மட்டுமே நான் உறுப்பினராக இருந்தேன். மோடி முதலமைச்சராக இருந்தபோது என்னுடைய கணவர் சரத்குமார் தன்னுடைய மீடியாவுக்காக பேட்டி எடுத்தார். குஜராத்தில் மோடியின் வளர்ச்சி பணிகளை கண்டு என்னிடம் பெருமையாக பேசினார். வரும் காலத்தில் மோடி இந்தியாவின் பிரதமராக வருவார் என சொன்னார்.  


அப்படியிருக்கையில் இந்த முறை பாஜக நிச்சயம் மேஜிக் நிகழ்த்தும். விருதுநகர் தொகுதியை பொறுத்தவரை நிச்சயம் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் வெல்ல மாட்டார். அவர் இந்த தொகுதிக்கு எதுவும் பண்ணவில்லை. தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை பொறுத்தவரை அவருக்கு அனுபவமில்லை. அவரால் ஆளுமையோடு செயல்பட முடியுமா என்ற கேள்வி உள்ளது. அவர்களை பொறுத்தவரை பரிதாபப்பட்டு மக்கள் ஓட்டு போடுவார்கள் என நினைக்கிறார்கள். அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. மக்களுக்கு தங்களுக்கு வாழ்வாதார பிரச்சினை” என ராதிகா கூறியுள்ளார்.