எங்களுக்கு தேர்தலில் நிற்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை என அன்புமணி ராமதாஸ் மகள்கள் சஞ்சுத்ரா, சங்கமித்ரா இருவரும் தெரிவித்துள்ளனர். 


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனிடையே தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா களமிறங்கியுள்ளார். இவர் ஒருபுறம் தீவிரமாக வாக்கு சேகரித்து கொண்டிருக்க, மறுபுறம் அம்மாவுக்கு போட்டியாக மகள்கள் சஞ்சுத்ரா, சங்கமித்ரா இருவரும் வாக்கு சேகரித்து வருகின்றனர். 


இவர்கள் இருவரும் ஏபிபி நாடுவுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளனர். அதில், “அப்பா அன்புமணி நாடாளுமன்ற தேர்தலில் நின்றபோது நாங்கள் வந்து வாக்கு சேகரித்தோம். தர்மபுரிக்கு நாங்க இரண்டு பேரும் வந்த நிலையில் தேர்வு நடந்து கொண்டிருந்ததால் அதிக நேரம் செலவிட முடியவில்லை. இப்போது என் தங்கைக்கு தேர்வு நேரமாக உள்ளது. நடுவில் இருக்கும் விடுமுறை நேரங்களில் வந்து வந்து சென்று கொண்டிருக்கிறார். எங்க அம்மா தேர்தலில் நிற்கிறார்கள். வாக்கு சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் முதலில் இங்கு வர வைக்க காரணமாக அமைந்தது. 


ஆனால் களத்துக்கு வந்த பிறகு மக்களிடம் நாங்கள் பேச பேச என்ன இந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என நினைக்கையில் பிரமிப்பாக உள்ளது. எங்ககிட்ட கோரிக்கைகள் எல்லாம் வைக்கிறார்கள். இதைப்பார்க்கும் நாங்க தான் வேட்பாளர்களா என தோன்ற வைக்கிறார்கள். நான் என் அம்மா, அப்பாவிடம் இன்றைக்கு மக்கள் இதை சொன்னார்கள். இந்த ஊரில் இந்த பிரச்சினை இருக்கு, இதை நாம் சரி செய்ய வேண்டும். ஜெயித்தீர்கள் என்றால் என்ன செய்வீர்களோ என தெரியாது இதையெல்லாம் நீங்கள் பண்ண வேண்டும் என தெரிவித்துள்ளோம். 


அதேசமயம் எங்களுக்கு தேர்தலில் வேட்பாளர்களாக நிற்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. சௌமியா அன்புமணி சிறந்த வேட்பாளர் என்பதால் தருமபுரி மாவட்டம் அந்த வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே களத்தில் இறங்கியுள்ளோம். அவர் 25 வருடங்களாக பொது வாழ்க்கையில் உள்ளார். 80 சதவிகிதம் பணியை சௌமியா அன்புமணி பார்க்கிறார்கள் என்றால், 20 சதவிகிதம் தான் நாங்கள் பார்க்கிறோம். திண்டிவனத்துக்கு பிறகு தருமபுரியில் இருக்கும் எங்களது சொந்தக்காரர்களை பார்க்க வருவது போன்ற உணர்வு தான் உள்ளது. 


அம்மாக்காக தான் முதலில் வந்தோம். ஆனால் இப்போது அம்மா மூலமாக மக்களுக்கு உதவ முடிவு செய்து விட்டோம். இந்த மாவட்டத்துக்கு தண்ணீர் வேண்டும், வேலை வாய்ப்பு வேண்டும் என கேட்கிறார்கள். அதையெல்லாம் செய்து தந்து செழிப்பான மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என தெரிவித்துள்ளனர்” என தெரிவித்துள்ளனர்.