மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் முதல் கட்டமாக நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து, இந்தியா முழுவதும் மீதமுள்ள மாநிலங்களில் 6 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை சர்வாதிகாரம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தநிலையில், இதற்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் இந்தியா எமர்ஜென்சி காலத்தில் இருந்ததை பற்றி பேசியுள்ளார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “கடந்த 1975ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திரா காந்தி அரசாங்கம் எமர்ஜென்சியை அமல்படுத்தியபோது, எனக்கு 24 வயது. எமர்ஜென்சிக்கு எதிராக ஜனதா பார்ட்டியில் இருந்தபோது, மிர்சாபூர்-சோன்பத்ராவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டேன்.
அப்போது நான் புதிதாக திருமணமானவன். நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு வீடு திரும்பினேன். போலீஸ் வந்திருப்பதாகச் சொன்னார்கள். வாரண்ட் இருப்பதாக என்னிடம் சொன்னார்கள். நள்ளிரவில் நான் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். நான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டேன். பித்தளை பாத்திரங்களில் பருப்பு, சப்பாத்தி போன்றவை வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் எனது அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல் போய், 27 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பலனின்றி உயிரிழந்தார்.
அப்போது, அம்மாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எனக்கு பரோல் கூட வழங்கவில்லை. அவரது கடைசி நாட்களில் என்னால் அவரை பார்க்க கூட முடியவில்லை. என் அம்மா இறந்த போது, நான் சிறையிலேயே தலையை மொட்டையடித்து கொண்டேன்” என தெரிவித்தார்.
எமர்ஜென்சி குறித்து ராஜ்நாத் சிங் பேசுவது முதல்முறையல்ல..
எமர்ஜென்சி குறித்து ராஜ்நாத் சிங் தாக்கி பேசுவது இது முதல்முறையல்ல. கடந்த மாதம், என்டிடிவி பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பேசிய அவர், ”இந்திய வரலாற்றில் அவசரநிலை ஒரு 'இருண்ட அத்தியாயம்'. பத்திரிக்கை சுதந்திரம் என்பது கிடையாவே கிடையாது. ஏதேனும் ஒரு நாளிதழ்களில் கட்டுரைகள் வெளியிடப்படுவதற்கு முன்பு படிக்கப்பட்டன, கட்சித் தலைமையகத்தில் இருந்து தலைப்புச் செய்திகள் முடிவு செய்யப்பட்டன, அரசாங்கத்தை எதிர்த்ததற்காக பத்திரிகையாளர்கள் சிறைக்குக் கூட அனுப்பப்பட்டனர். சிறைச்சாலை மட்டுமல்ல, எமர்ஜென்சியின் போது நானே சிறையில் இருந்திருக்கிறேன். அங்கு, பல பத்திரிகையாளர்களும் துன்புறுத்தப்பட்டனர்.” என்றார்.
மக்கள் விரும்பும் வரை மோடிதான் பிரதமர்:
தொடர்ந்து பேசிய அவர், “சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது யார் என்பதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். பிரதமர் மோடியின் மீது மக்களுக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருக்கிறது. அவர் 3வது முறையாக மட்டுமல்ல, 4வது முறையாகவும் அவரே பிரதமராக பதவி வகிப்பர். மக்கள் விரும்பும் வரை நரேந்திர மோடியே பிரதமராக பதவி வகிப்பார். மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கும், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் நல்ல வாக்கு சதவீதத்தை பெறும். தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிபெற்று ஆட்சியமைக்க பாஜக கடுமையாக உழைத்து வருகிறது” என்று தெரிவித்தார்.