விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் து.ரவிக்குமார் இன்று திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய பகுதியில் பிரச்சாரம்  செய்து வருகிறார். இந்த பிரச்சாரத்தில் வேட்பாளரை ஆதரித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். இதன் ஒரு பகுதியாக வேட்பாளரின் டிஜிட்டல் பிரச்சாரத்திற்கான QR Code யை அமைச்சர் பொன்முடி அங்கிருந்த சுவற்றில் ஒட்டினார். தொடர்ந்து அருகில் இருந்த வீடுகளுக்கு சென்று மக்களிடம் உரையாடி வாக்கு சேகரித்தார். இதைத்தொடர்ந்து வேட்பாளர் ரவிக்குமார் அருகிலிருந்த கடைகளில் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார்.


QR Code மூலம் பிரச்சாரம்


இதனிடையே முதன்முறையாக 2024 நாடாளுமன்ற தேர்தலில் டிஜிட்டல் வெளியிலும் தனது பிரச்சாரத்தை விசிக துவங்கியுள்ளது. இது அதிகளவு இளைஞர்களை சென்று சேரும் விதமாக QR Code மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.‌ விசிக சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் காணப்படும் QR code -யை செல்போனில் பார்க்கும்போது கைப்பேசி திரையில் தோன்றும் ரவிக்குமார், கடந்த முறை எனக்கு வாக்களித்து விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக என்னை தேர்ந்தெடுத்தீர்கள். எனது கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் முதல்முறையாக மினி டைட்டில் பார்க் விழுப்புரத்தில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலைவாய்ப்பு பெற உள்ளனர். நம்முடைய மாவட்டத்தில் கல்வி வளர்ச்சிக்கும், சுகாதார மேம்பாட்டிற்கும் முன்னுரிமை அளித்து பணியாற்றி இருக்கிறேன். 


குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் அதிகம் காணப்பட்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பதற்கு 130 சுகாதாரக் கிளை நிலையங்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோயை கண்டறியும் கருவியை வழங்கியுள்ளேன். அதேபோல கர்ப்பப்பை வாய் புற்றுநோயை  கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை முதல்முறையாக நமது மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். மேலும், நாடாளுமன்றத்தில் சிறுபான்மை மக்களின் நலனுக்காகவும், மாநில உரிமைக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுத்துள்ளேன். தொடர்ந்து உங்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒழிப்பேன் என தெரிவித்துள்ளார். 


இந்த QR Code விழுப்புரம் நகர் மற்றும் கிராம பகுதி கடைவீதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் சாலைகளில் ஓட்டுப்பட்டுள்ளது‌. இதன் வாயிலாக இனிமேல் விழுப்புரம் தொகுதி மக்கள் அவர்களது நாடாளுமன்ற உறுப்பினரின் ஐந்தாண்டு கால செயல்பாடுகள் குறித்து தங்கள் கைபேசியிலேயே தங்கு தடையின்றி எளிதாக காணலாம்.