Lok Sabha Elections 2024: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பது குறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்:


தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தமுறை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை வெளியான பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனின் பெயர் இடம்பெறவில்லை. இந்நிலையில், பணம் இல்லாத காரணத்தால் தான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். 


”தேர்தலில் போட்டியிட பணமில்லை”


டெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தேர்தலில் போட்டியிடாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “பாஜக தலைவர் நட்டா தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்தார். ஆனால், ஒருவாரம் அல்லது 10 நாட்கள் யோசித்த பிறகு, நான் சென்று தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சி தலைமைக்கு தெரிவித்தேன். தேர்தலில் போட்டியிடுவதற்கு தேவையான பணம் என்னிடம் இல்லை. ஆந்திரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு என எந்த மாநிலத்தில் போட்டியிடுவது என்ற பிரச்னை எனக்கும் இருந்தது.  அவர்கள் பயன்படுத்தும் பல்வேறு வெற்றிக்கான அளவுகோல்களைப் பற்றிய கேள்வியும் இதில் உள்ளது. நீங்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவரா அல்லது நீங்கள் அந்த மதத்தைச் சார்ந்தவரா? நீங்கள் இதைச் சார்ந்தவரா? என கேட்கப்படும். என்னால் அதைச் செய்ய முடியாது, எனவே நான் போட்டியிடவில்லை என்று நான் கூறினேன்.


”அது என் நிதி அல்ல”


அவர்கள் எனது வாதத்தை ஏற்றுக்கொண்டனர். எனவே நான் இப்போது தேர்தலில் போட்டியிடவில்லை” என அமைச்சர் விளக்கமளித்தார். தொடர்ந்து, நாட்டின் நிதியமைச்சரிடம் ஏன் தேர்தலில் போட்டியிட போதுமான நிதி இல்லை என்று கேட்டபோது, “எனது சம்பளம், எனது சம்பாத்தியம் மற்றும் எனது சேமிப்பு என்னுடையது, இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதி என்னுடையதல்ல” என அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


மக்களை சந்திக்காத அமைச்சர்:


கடந்த 2016ம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிர்மலா சீதாராமன், 2019ம் ஆண்டு முதல் மத்திய நிதியமைச்சர் பதவியை வகித்து வருகிறார். ஆனால், ஒருமுறை கூட மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், நாட்டு மக்களுக்கான பட்ஜெட்டை சமர்பிக்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இதனால், நடப்பு தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.


அதேநேரம், ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள பியூஷ் கோயல், பூபேந்தர் யாதவ், ராஜீவ் சந்திரசேகர், மன்சுக் மாண்டவியா, ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் எல். முருகன் ஆகியோரை மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களாக பாஜக களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.