நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பூத் ஸ்லிப்பை ஆன்லைனிலேயே பெற இந்தியத் தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது. அது எப்படி என்று பார்க்கலாம்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 19) மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 13 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.


தமிழக வாக்காளர்கள் மொத்தம் எத்தனை பேர்?


தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் (சுமார் 6.23 கோடி) உள்ளனர். இவர்களில் ஆண்கள்- 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793, பெண்கள்- 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665, மூன்றாம் பாலினத்தவர்கள் 8 ஆயிரத்து 467 பேர் ஆவர். இதில் 18 முதல் 19 வயது வரையிலான முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் ஆவர்.


வாக்குச் சாவடிகள் எத்தனை?


தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் வாக்களிக்க ஏற்ற வகையில் மொத்தம் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. 181 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இந்த 181 வாக்குச் சாவடிகளிலும் துணை நிலை ராணுவத்தினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுவர். 65% வாக்குச்சாவடிகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.


இந்த நிலையில் வாக்காளர்கள் சிலருக்கு பூத் ஸ்லிம் கிடைக்கவில்லை. வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் ஸ்லிப்பில் வாக்காளர் பெயர், வயது, முகவரி, தொகுதி, வாக்களிக்கும் இடம், அங்குள்ள வரிசை பிரிவு ஆகிய மொத்த விவரங்களும் குறிப்பிடப்பட்டு இருக்கும்.


ஒருவேளை, பூத் சிலிப் இன்னும் கிடைக்கப்படவில்லை என்ற சூழலில், எங்கு சென்று வாக்களிப்பது என்று தெரியாது. எனினும், அதனை எளிதில் ஆன்லைனில் பெற இந்தியத் தேர்தல் ஆணையம் electoralsearch.eci.gov.in எனும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.




பூத் ஸ்லிப்பை ஆன்லைனிலேயே பெறுவது எப்படி?


வாக்காளர்கள் electoralsearch.eci.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் 3 வகைகளில் வாக்காளர்கள், தங்களின் வாக்குச்சாவடி விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.



  1. முதலில், வாக்காளர் அடையாள எண்ணை உள்ளீடு செய்தால், பூத் விவரங்கள் தெரியவரும்.

  2. அல்லது வாக்காள பெயர், பிறந்த தேதி/ வயது, முகவரி, தொகுதி உள்ளிட்ட மற்ற விவரங்களைச் சரியாகக் கொடுத்தாலும் பூத் விவரங்கள் தெரிய வரும்.

  3. மூன்றாவதாக வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணைப் பதிவு செய்தாலும் பூத் விவரங்கள் தெரியவரும்.


பூத் ஸ்லிப் ஆவணம் கிடையாது


அதே நேரத்தில் வாக்காளர்கள் பூத் ஸ்லிப்பை அடையாள அட்டையாகக் கொண்டு செல்ல முடியாது. அதனுடன் அரசு அல்லது அங்கீகாரம் பெற்ற தனியார் அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டியது முக்கியம்.