மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த முறை சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.


தமிழகம், புதுச்சேரிக்கு நன்றி:


இந்த நிலையில், நாட்டின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “, தமிழ்நாடு மக்கள் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றியைத் தந்ததற்கு நாங்கள் அடக்கத்துடன் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியா கூட்டணியிலே தமிழ்நாடு மட்டும்தான் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளது. இது நமக்கு சிறப்பான பெருமை. அதற்கு தமிழக, புதுச்சேரி மக்களுக்கு நன்றி.


மோடி, அமித்ஷாவின் பொய் பிரச்சாரம் அம்பலம்:


அகில இந்திய அளவில் இந்த கூட்டணி ஏறத்தாழ 234 இடங்களைப் பெற்றுள்ளது. அது ஒன்றும் சாதாரண எண் அல்ல. பா.ஜ.க. வெறும் 240 இடங்கள், அவர்களது தலைமையிலான கூட்டணி 290 இடங்கள் என்று மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது, 4வது மற்றும் 5வது சுற்று வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும்போதே, பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா 300-ஐத் தாண்டி விட்டோம். 350-ஐ கடந்து விட்டோம், 400-ஐ கடந்து விட்டோம் என்று கூறினார்கள்.


அவை எல்லாம் எந்தளவு பொய்யான பிரச்சாரம் என்று இப்போது அப்பட்டமாகிவிட்டது. இதைவிட பொய்யான பிரச்சாரம் என்பது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு. இவை எல்லாம் தயாரிக்கப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு. நானும் வாக்குப்பதிவு அன்று பல வாக்குச்சாவடிகளுக்குச் சென்றேன். எந்த வாக்குச்சாவடியிலும் எந்த கருத்துக்கணிப்பாளர்களும் வெளியில் நின்று வாக்காளர்களிடம் கருத்து கேட்டதாக எந்த செய்தியும் இல்லை.


பா.ஜ.க.வுக்கு பாடம்:


திடீரென நாங்கள் இத்தனை லட்சம் பேரிடம் கருத்துக்கணிப்பு செய்தோம் என்று 350, 400 என்று கூறினார்கள். எப்படி அனைவரும் 350 என்று வர முடிந்தது? அதற்கு ஒரு காரணம் இவை அனைத்தும் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டது. இதை அனைத்து தொலைக்காட்சியிலும் போடச் சொல்லி, 350 -400 என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களை முட்டாளாக்கினார்கள்.


எந்தளவு மக்களை முட்டாளாக்க முடியும் என்று பா.ஜ.க. முயற்சி செய்தது என்பதை பார்த்தோம். அதையெல்லாம் மீறி பா.ஜ.க.வுக்கு மக்கள் அடக்கத்தை கற்றுத்தந்துள்ளனர். அவர்கள் ஆட்சி அமைக்கப்போகிறார்கள். நாளை மறுநாள் மீண்டும் மோடி பிரதமராக பொறுப்பேற்கிறார். தன் பேச்சில் நேருவுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்கிறார். மோடிக்கு கிடைத்தது 282, 303, 240 ஆகும். நேருவுக்க கிடைத்தது 361, 374, 364. நேருவுடன் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வதை நாங்கள் நிராகரிக்கிறோம்


மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்:


3வது முறை பொறுப்பேற்க கூடிய மோடிக்கு குடிமகன் என்ற முறையில் அவருடைய அரசுக்கு வாழ்த்துகள். அதேசமயம், எதிர்க்கட்சி என்ற முறையில் அரசின் செயல்பாடுகளை கண்டிப்பாக கண்காணிப்போம்.


மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இன்னும் முன்னேற்றம் செய்ய வேண்டும். சில மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. இது எங்களுக்கு படிப்பினை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை நிராகரிக்கவில்லை. விவிபேட் தாள் 5 நொடிகள் மட்டுமே இருக்கிறது. அதன்பின்பு பெட்டிக்குள்ளே விழுந்துவிடுகிறது. இப்பவும் 10-க்கு 4 பேர் இவிஎம் இயந்திரத்தை சந்தேகிக்கின்றனர்.  அதை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்பது எங்கள் நிலை. கட்சியில் இரண்டு, மூன்று பேர் அதை சந்தேகிக்கின்றனர்.


அவருக்கு என்ன பொறாமை?


அந்த தாளை எடுத்து பெட்டியில் போடும் வசதியை செய்ய வேண்டும்.  பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. அவர்கள் கொண்டாடலாம். ஆனால், அவர்கள் பொலிவிழந்துள்ளனர். பங்குச்சந்தையில் ஏற்பட்டது வளர்ச்சியல்ல. வீக்கம். இந்தளவிற்கு இந்திய பொருளாதாரம் உயரவில்லை. ஆனால், பங்குச்சந்தை பெருமளவு வளர்கிறது என்றால் அது வீக்கம். இந்த தேர்தலில் தார்மீக வெற்றி காங்கிரசுக்கு. தார்மீக தோல்வி பா.ஜ.க.வுக்கு. அவர்கள் உற்சாகம் இல்லாமல் இருப்பதை நான் பார்க்கிறேன். நாங்கள் கொண்டாடுவதில் அவருக்கு என்ன பொறாமை?


பா.ஜ.க.வால் நிலையான ஆட்சி தர முடியுமா? என்பதை மோடிதான் பதில் சொல்ல வேண்டும். குஜராத் முதலமைச்சராக. 10 ஆண்டுகால பிரதமராக மோடி இருந்தபோது அவர் ஒரு மனித ஆட்சி நடத்திதான் பழக்கம். தற்போது கூட்டணி ஆட்சி நடத்த வேண்டிய கட்டாயம். மணிப்பூரில் ஒரு ஆண்டு காலமாக உள்நாட்டு கலவரம் நடைபெற்று வருகிறது. இது இந்த நாட்டுக்கே களங்கம்."


இவ்வாறு அவர் பேசினார்.