பீகாரில் பா.ஜ.க. – ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கவிதா தேவி. இவர் கோர்கா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர். இவரது உறவினர் நீரஜ் பஸ்வான். அவருக்கு வயது 35.


பா.ஜ.க. எம்.எல்.ஏ. உறவினர் சுட்டுக்கொலை:


இவர் பீகாரின் கதிகார் மாவட்டத்தில் உள்ள கதிகார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தோஷி என்ற பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நீரஜ் பஸ்வான் இன்று அவரது வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று அவரை திடீரென சுட்டது. இதில் நீரஜ் பஸ்வான் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.


இதையடுத்து, அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நீரஜ் பஸ்வான் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


முன்பகை காரணமா?


துப்பாக்கியால் சுட்ட நபர்கள் நீரஜ் பஸ்வானை சுட்டுவிட்டு தப்ப முயன்றுள்ளனர். அப்போது, அந்த நபர்களில் ஒரு நபரை அப்பகுதியில் வசிப்பவர்கள் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பவத்தில் இருவர் ஈடுபட்டதாகவும், ஒருவரை போலீசார் பிடித்துள்ள நிலையில் மற்றொருவரை போலீசார் தேடி வலை வீசி வருகின்றனர்.


கொலை செய்யப்பட்ட எம்.எல்.ஏ. உறவினரான நீரஜ் பஸ்வான் கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளி ஆவார். அவர் தற்போது பிணையில் வெளியில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த கொலை முன் விரோதம் காரணமாக நடைபெற்றதா? வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ. உறவினர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.