மயிலாடுதுறையில் வாக்கு எண்ணும் மையத்தில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு இருந்ததால் செய்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல்
இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜூன் 4ம் தேதியான இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
உணவில் வண்டு
ஆறு சட்டமன்ற தொகுதிகளை ஒருங்கிணைத்த மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குகள் மன்னம்பந்தல் பகுதியில் உள்ள ஏவிசி பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதனை முன்னிட்டு ஏவிசி தனியார் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்தது. இதனிடையே இன்று காலை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மகாபாரதி முன்னிலையில் பாதுகாப்பு அறைகள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதற்காக செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில், மீடியா கண்ட்ரோல் ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களுக்கு குடிநீர் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது வழக்கம்.
இந்நிலையில் இன்று மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் செய்தியாளருக்கு வழங்கப்பட்ட உணவில், வடையின் உள்ளே வண்டு இருந்துள்ளது. இதுகுறித்து செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் கேட்ட போது, வண்டை எடுத்து போட்டு விட்டு சாப்பிடவும் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட செய்தியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், பல செய்தியாளர்களுக்கு உணவும் வழங்காமலும், சிலருக்கு வெறும் இட்லி மட்டும் வழங்கியுள்ளனர். அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தெரிவித்தால் செய்தியாளர்கள் யாரும் உணவு எடுத்து வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே சென்றுவர அனுமதி இல்லை என்பதால் செய்தியாளர்கள் உணவு இன்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.