நாடுமுழுவதும் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் நடந்து வரும் மக்களவை தேர்தலில் பார்க்க வேண்டிய முக்கியமான தொகுதிகளில் மண்டியும் ஒன்று. இங்கு காங்கிரஸ் தலைவர் விக்ரமாதித்ய சிங்கை எதிர்த்து நடிகை கங்கனா ரனாவத் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். மக்களவை தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ம் தேதி மண்டியில் நடந்தது. 


கலக்கும் கங்கனா ரனாவத்:


மண்டியில் 11 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், பா.ஜ.,வின் கங்கனா ரணாவத்துக்கும், காங்கிரசின் விக்ரமாதித்ய சிங்குக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 






இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதி பாஜக வேட்பாளரும், நடிகையுமான கங்கனா ரனாவத் தனது இல்லத்தில் பிரார்த்தனை செய்தார். சமீபத்திய இந்திய தேர்தல் ஆணையம் அளித்த தகவலின்படி, காங்கிரஸ் கட்சியின் விக்ரமாதித்ய சிங்கை விட 37,033 வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். தற்போது வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.


முன்னதாக, காலை 9.30 மணியளவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், கங்கனா ரனாவத் 70704 (+ 10719) வாக்குகள் பெற்றுள்ளார். விக்ரமாதித்ய சிங் 59985 (-10719) வாக்குகளைப் பெற்றார். கங்கனா ரனாவத் 10719 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 






34 வயதான விக்ரமாதித்ய சிங் இதற்கு முன்பு இரண்டு சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். ஆனால், மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடுவது இதுவே முதல்முறை. மண்டி மக்களவை தொகுதியை பாரதிய ஜனதா கட்சியின் ராம் ஸ்வரூப் சர்மா, கடந்த 2024 மற்றும் 2019ல் முறையே 49.97% மற்றும் 68.75% வாக்குகளுடன் வென்றார். 


கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 17ம் தேதி ஸ்வரூப் சர்மா காலமானார். இதையடுத்து, இடைத்தேர்தலில் விக்ரமாதித்ய சிங்கின் தாயார் பிரதிபா சிங் நவம்பர் மாதம் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்று எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


அரசியல் குடும்பம்: 


நடிகை கங்கனா ரனாவத்தின் பெரியப்பாவான சர்ஜு சிங் ரனாவத் எம்எல்ஏவாக இருந்தவர். அவரது தாயார், ஆஷா ரனாவத், மண்டியில் இருந்து பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும், அவரது தந்தை அமர்தீப் ரனாவத் ஒரு தொழிலதிபர். ஆஷா ரனாவத் ஒருமுறை குடும்பம் ஆரம்பத்தில் காங்கிரஸை ஆதரித்ததாகவும் ஆனால் கங்கனாவின் செல்வாக்கின் காரணமாக பாஜகவுக்கு ஆதரவாக மாறியதாகவும் தெரிவித்தார்.