NDA Chandrababu NitishAlliance: பாஜக கூட்டணியில் சந்திரபாபு மற்றும் நிதிஷ்குமார் முறையே, 3 மற்றும் 2 கேபினட் அமைச்சர் பதவிகளை கேட்பதாக கூறப்படுகிறது.
பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை:
நாடாளுமன்ற மக்களவைக்கான 18வது தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கூட்டண் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, தனிப்பெரும் கட்சியான பாஜக, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நேற்று டெல்லியில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பாஜக ஆலோசனை நடத்தியது. அதில் தங்களது கோரிக்கைகளை சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோர் முன்வைத்தாக கூறப்படுகிறது. அந்த தகவல் தற்போது வெளியகியுள்ளது.
முக்கிய இலாக்காக்களை குறிவைத்த சந்திரபாபு, நிதிஷ்?
வெளியாகியுள்ள தகவல்களின்படி, ”சந்திரபாபு நாயுடு 3 கேபினட் மற்றும் 3 இணை அமைச்சர் பதவிகளை கேட்டுள்ளார். அதில் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, வேளாண்மை, ஐ.டி., மற்றும் நீர்வளம் ஆகிய துறைகளை பெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இதுபோக ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார். மறுமுனையில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் குறைந்தபட்ச பொதுசெயல் திட்டம் வகுக்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். அதோடு, 3 கேபினட் மற்றும் 2 இணை அமைச்சர் என, மொத்த 5 அமைச்சர் பதவிகளை வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளார். 2 எம்.பிக்களை வைத்துள்ள மதச்சார்பற்ற ஜனதாதளமும் தங்களுக்கு, வேளாண்துறை அமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என கோரியுள்ளது. பீகாரில் 5 தொகுதிகளை வென்ற சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தியும் அமைச்சரவையில் இடம்பெற நிபந்தனை விதித்துள்ளது. ” என கூறப்படுகிறது.
நெருக்கடியில் பாஜக:
தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகள் ஆதரவு பெற வேண்டியது பாஜகவிற்கு அவசியமாக உள்ளது. இதற்காக அவர்களின் நிபந்தனைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் கூட்டணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், சிராக் பஸ்வான் ஆகியோரின் நிபந்தனைகள் தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை பாஜக கூட்டணி கட்சி எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, கூட்டணி கட்சி தலைவர்களின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பாஜக கூட்டணி ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்படக்கூடும்.