Trichy Lok Sabha Constituency: திருச்சி என்றாலே எப்போதும் தமிழ்நாடு அரசியல் கட்சிகளுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில்  தேர்தல் வந்தால் திருச்சியை மையப்படுத்தியே அனைத்துக் கட்சிகளும் தங்களது பணிகளை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் யார் போட்டியிடுவார்?  வேட்பாளர்கள் யார் என்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். அந்த வகையில் வருகின்ற  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, கூட்டணியில் உள்ள எந்த கட்சி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தங்களது தொகுதி பங்கியீட்டினை இறுதி கட்டத்தை முடித்துள்ளது.  இன்னும் ஒரு சில நாட்களில் அனைத்து கட்சிகளும் தங்களுக்கு எந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்க உள்ளனர். காங்கிரஸ் , பாஜக, அமமுக, மதிமுக ஆகிய கட்சிகள் அனைத்து திருச்சி மையபடுத்தியே தங்களின் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்கினர். 


திமுக - காங்கிரஸ் பேச்சுவார்த்தை..


குறிப்பாக திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, திருச்சி நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஏனென்றால் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆகையால் மீண்டும் திருச்சியை காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டும் எனத் தொடர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியுள்ளனர்.




ஆனால் கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திருநாவுக்கரசர் பொதுமக்களை சந்திக்க வரவில்லை, அவர்களின் குறைகளை கேட்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக வெற்றி பெற்ற பிறகு மக்களை சந்தித்து நன்றி கூட சொல்லவில்லை என கூறப்படுகிறது. மீண்டும் தேர்தல் வர உள்ளதால் கடந்த சில மாதங்களாக திருச்சி தொகுதியில் பல்வேறு இடங்களில் மக்களை சந்திக்க சென்ற எம்.பி. திருநாவுகசுக்கு தொடர்ந்து எதிர்ப்பு அலைகளே கிளம்பி வருகிறது. ஆகையால் மீண்டும் காங்கிரசுக்கு திருச்சி தொகுதியை ஒதுக்குவது குறித்து இழுபறி நீடித்து வருகிறது.  அதேசமயம் திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு மகன், அருண் நேருவுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். 


திமுக - மதிமுக பேச்சுவார்த்தை.. 


வருகின்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மதிமுக தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தீவிரமாக நடத்தி வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் இறுதி செய்யப்படும் என மதிமுக வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியை மதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும், எங்கள் கட்சி சார்பாக துரை வைகோ போட்டியிட உள்ளார் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் திமுக வட்டாரங்களில் மதிமுகவுக்கு திருச்சியை ஒதுக்கினால் வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்று ஆலோசனை செய்த பிறகு தங்களுடைய முடிவை தெரிவிப்பதாக கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 




பாஜக - அமமுக பேச்சுவார்த்தை .. 


வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக வலுவான கூட்டணியை அமைப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் அமமுக கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த தேர்தலில் அமமுக சார்பாக சாருபாலா தொண்டைமான் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார். ஆகையால் மீண்டும் இந்த தேர்தலில் திருச்சி தொகுதியை ஒதுக்கீடு செய்தால் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறலாம் என அமமுக முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் பாஜகவினர் திருச்சியில் நமது வேட்பாளர்கள் நின்றால் மாபெரும் வெற்றியை பெற முடியும்,  மக்களுடைய ஆதரவு நமக்கு அதிகமாக உள்ளது. ஆகையால் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்காமல் திருச்சியை நமது கட்சிகளுக்கே ஒதுக்க வேண்டுமென பாஜக முக்கிய நிர்வாகிகள், பாஜக மேலிடத்திற்கு,  வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


இதனால் திருச்சி நாடாளுமன்றத் தேர்தலில் வருகின்ற தேர்தலில் எந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டிடுவார்கள். என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி என்றாலே திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கையில் அனைத்து கட்சியினரும் திருச்சியை மையப்படுத்தியே  தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தொடர்ந்து பரவி வருகிறது.