தேர்தல் செலவின ஆய்வு கூட்டம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 2024-நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு, தேர்தல் செலவினப் பார்வையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 13.விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர் சித்தரஞ்சன் தாங்கடா மஜ்ஹி, தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் பழனி முன்னிலையில், நடைபெற்றது.
இக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில், 13.விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கணக்கு குழு மற்றும் செலவினப்பார்வையாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அடிப்படை கட்டமைப்பு வசதிகள்
மேலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், தேர்தல் பணிகள் தொய்வின்றி மேற்கொள்வதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டறியப்பட்டது. தொடர்ந்து, பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு , காணொலி கண்காணிப்புக்குழு மற்றும் காணொலி பார்வைக்குழு ஆகிய குழுக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வருமான வரித்துறைக்கு தகவல்
மேலும், பறக்கும்படையினர், ரூ.50,000/-க்கு மேல் பணம் எடுத்துச் சென்று உரிய கணக்கு காட்டப்படவில்லையெனில் அத்தொகை பறிமுதல் செய்யப்பட வேண்டும். இத்தொகை ரூ.10.00 இலட்சத்திற்கு மேற்பட்டால் வருமான வரித்துறைக்கு தகவல்அளித்திட வேண்டும். மேலும், இப்பணம் சட்டத்திற்குபுறம்பான வெளிநாட்டு கரன்சியாக இருந்தால் அமலாக்கப் பிரிவுக்கு தகவல் அளித்து அத்துறையால் பரிமுதல் செய்யப்பட்ட வேண்டும்.
அதேபோல், ரூ.10,000/-க்கு மேற்பட்ட மதிப்பில் பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டால் அதற்கான உரிய கணக்கு/ ஆதாரம் காட்டப்படாவிட்டால் அவை பறிமுதல் செய்யப்பட வேண்டும். மேலும், சட்டத்திற்கு புறம்பான மதுபானங்கள், சந்தேகப்படும் படியான பொருட்கள் அல்லது ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என கண்காணித்திட வேண்டும். பணப்புழக்கம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்து தகவல் கிடைக்கப்பெற்றால் உடனடியாக மேல்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வீடியோ பதிவு
நிலையான கண்காணிப்புக்குழுவினர், மாவட்டத்தில் முக்கியச் சாலைகள் அல்லது உள்வட்டச்சாலைகளில் சோதனைகள் நடத்திட வேண்டும். பறிமுதல் செய்யப்படும் பொருட்கள் மற்றும் ரொக்கப்பணத்தினை வீடியோ பதிவு செய்திட வேண்டும். இப்பதிவினை நாள்தோறும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்திட வேண்டும். பறக்கும் படையினரும், நிலையான கண்காணிப்பு குழுவும் வாகனங்கள் அல்லது பயண மூட்டைகள் சோதனைச் செய்யும்போது பணிவாகவும், கடமை மனப்பாங்குடனும் நடந்துகொள்ள வேண்டும். பெண் அலுவலர் இல்லாத சமயத்தில் பெண்களின் கைப்பையை சோதனைச் செய்யக்கூடாது.
காணொளி (வீடியோ) கண்காணிப்பு குழுவினர், பொதுக்கூட்டம், பிரச்சாரம் மற்றும் பேரணிகளை பதிவு செய்திட வேண்டும். மேலும், படப்பிடிப்பு தொடங்கும்போது ஒலி முறையுடன் தலைப்பு, நிகழ்வின் வகை, நாள், இடம், அரசியல் கட்சி பெயர், நிகழ்விற்கு ஏற்பாடு செய்யும் வேட்பாளர் ஆகிய தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், பேரணி அல்லது பொதுக்கூட்டத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு வாகனம், அதன் வர்த்தக குறியீடு, பதிவு எண், மேசை நாற்காலிகள், பிரச்சார மேடை, பதாகைகள், கட் அவுட் ஆகியவற்றின் சாட்சியஙகள் நன்கு தெளிவாக காணக்கூடிய வகையில் காணொளி பதிவு செய்திட வேண்டும். காணொளி பார்வையிடும் குழுவினர், காணொளி கண்காணிப்புக்குழுவால் அளிக்கப்படும் காணொளி முழுவதையும், கவனத்துடன் பார்வையிட்டு அறிக்கை தயாரித்திட வேண்டும்.
மேலும், இதுதொடர்பான காணொளி பதிவுகளிலிருந்து குறுவட்டுக்களை உருவாக்கிட வேண்டும். இதில் அடையாள எண், நாள் மற்றும் பதி செய்தகுழு அலுவலர் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். குறுவட்டுக்களை தயாரித்திட வெளிமுகரமைப்பிடம் காணொளி பதிவுகளை அளிக்கக்கூடாது.
புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை
மேலும், ESMS APP மற்றும் சி-விஜில் செயலியில் கையாள்வதோடு, அதில் வரப்பெறும் புகார்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. தேர்தல் செலவு கண்காணிப்பு குறித்த அறிவுறுத்தலின்படி, தேர்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2024-நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் ஊடக மையம் மற்றும் வாகன தணிக்கை கண்காணிப்பு மையத்தினை 13.விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் செலவினப் பார்வையாளர் சித்தரஞ்சன் தாங்கடா மஜ்ஹி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி, முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, புகார் குறித்த பதிவேட்டினை ஆய்வு செய்தார்.