விழுப்புரம்: விழுப்புரத்தில் ஒருங்கிணைத்த இந்திய குடியரசு கட்சி வேட்பாளருக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டுள்ளதால் அதன் வேட்பாளரே சிலிண்டரை தலையில் தூக்கி வைத்து கொண்டு நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுவாரசியம் சம்பவம் அரங்கேறியுள்ளது.


தேர்தல் பிரச்சாரம் 


நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் 17 வேட்பாளர்கள் களம் காணுகின்ற நிலையில் விசிக, பாமக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விழுப்புரம் (தனி) தொகுதியில் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் ஆறுமுகம் என்ற வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் சிலிண்டர் சின்னம் வழங்கி உள்ளது.


சிலிண்டர் சின்னம்


சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டுள்ளதால் தேர்தல் பிரச்சார வாக்கு சேகரிப்பில் ஆறுமுகம் ஈடுபட்டு வருகின்றார். இன்றைய தினம் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஆறுமுகம் தனக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டுள்ளதால் சிலிண்டர் சின்னத்தில் வாக்களிக்க கோரி காலி சிலிண்டரை தலையில் சுமந்தபடி ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுனர்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விழுப்புரத்தில் ஒருங்கினைத்த இந்திய குடியரசு கட்சி வேட்பாளருக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டுள்ளதால் அதன் வேட்பாளரே சிலிண்டரை தலையில் தூக்கி வைத்து கொண்டு நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சுவாரசியம் சம்பவமும் அரங்கேறியுள்ளது.


இந்திய தேர்தல் ஆணையம் 


இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம்  நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 20.03.2024 தேதி முதல் 27.03.2024 வரை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனுத்தாக்கலின் போது விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிட மொத்தமாக  31 பேர்  மனுதாக்கல் செய்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த மனுக்கள் மீதான பரிசீலனை 28 ஆம் தேதி நடைபெற்றபோது பல்வேறு காரணங்களுக்காக 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 18 மனுக்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில், வேட்பு மனு திரும்ப பெறுவதற்கு   30.03.24 அனுமதிக்கபட்டிருந்த நிலையில் விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த ஒருவர் மட்டும் மனுவை திரும்ப பெற்றதால் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.