DMDK Canditaes: விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள, தேமுதிக சார்பில் விஜய பிரபாகர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அண்மையில் மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்தின் மகன் மூத்த மகனாவார். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் அரசியலில் முகம் காட்டி வந்தாலும், முதன்முறையாக தற்போது தான் தேர்தலில் களம் காண்கிறார். இதேபோன்று, அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஒதுக்கப்பட்ட மற்ற 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., பார்த்தசாரதி, திருவள்ளூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., நல்லதம்பி, கடலூர் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ., சிவக்கொழுந்து மற்றும் தஞ்சாவூர் தொகுதியில் சிவநேசன் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
நட்சத்திர தொகுதியான விருதுநகர்:
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, மாணிக்கம் தாக்கூர் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணி சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், விருதுநகர் மக்களவைத் தொகுதி இந்த நாடாளுமன்ற தேர்தலில் கவனம் பெற்று, நட்சத்திர தொகுதியாக உருவெடுத்துள்ளது.