வாணியம்பாடியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து சிறப்பு தொழுகை நடத்தினர். இதில், வேலூர் அதிமுக வேட்பாளர் ச.பசுபதி இஸ்லாமியர்களோடு இணைந்து தொழுகை செய்து துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆம்பூர் ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். ரமலான் பண்டிகை ஒட்டி வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு அருகே உள்ள ஃஇத்கா காதர்பேட் மைதானத்தில் இஸ்லாமியர்கள் 10000க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அப்போது வேலூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ச.பசுபதி இஸ்லாமியர்களோடு இணைந்து அவரும் தொழுகை செய்து பின்னர் வெளியில் வரக்கூடிய இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் வாணியம்பாடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
மேலும், செட்டியப்பனூர் பகுதியில் அமைந்துள்ள ஃஇத்கா மைதானத்தில் 10000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து தொழுகை முடித்து வீடு திரும்பிய இஸ்லாமியர்களிடம் திமுக நகர செயலாளர் சாரதி குமார் இஸ்லாமிய மக்களிடம் வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.