தேனி பாராளுமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நாராயணசாமி வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனை அடுத்து இன்று கம்பம் சட்டமன்றத் தொகுதி, போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் தனது தேர்தல் பரப்புரையை துவக்கி பிரச்சாரம் செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக வேப்பம்பட்டி, காமாட்சிபுரம், சிப்பாலக்கோட்டை பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு ஓடைப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்த வாக்கு சேகரிப்பின் போது அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு தங்களது பொன்னான வாக்குகளை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வின்போது, வேட்பாளர் வீட்டில் நாராயணசாமி பேசுகையில், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் ஓடைப்பட்டி, காமாட்சிபுரம், சீப்பாளக்கோட்டை, எரசக்கநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டினை சரி செய்வதற்கு தொட்டம்மன் அணைத்திட்டம் கொண்டு வந்து குடிநீர் பிரச்சினை தீர்க்க வழிவகை செய்வேன் என்று உறுதி கூறி வாக்கு சேகரித்தார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், இந்த தேர்தல் என்பது இந்திய திருநாட்டின் உடைய தலையெழுத்தை நினைக்கக்கூடிய தேர்தல். தேனி நாடாளுமன்றத்தின் வளர்ச்சிக்காக உங்களின் குரலாக மண்ணின் மைந்தன் ஆக இருக்கக்கூடிய நாராயணசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இன்று இவரை எதிர்த்து நிற்பவர்கள் திமுக கூட்டணியில் நிற்கின்ற வேட்பாளர் ஒரு தேர்தலுக்கு ஒரு கட்சியில் இருக்கிறார். அடுத்து எந்த சின்னத்தில் நிற்பார் என்று அவருக்கே தெரியாது.
அதேபோன்று பாரதிய ஜனதா கட்சியிலே சுயேட்சையாக ஒருவர் நிற்கிறார். அவர் இரட்டை இலையில் வாழ்வு பெற்று வளம் பெற்று கட்சியில் மிகப்பெரிய பொறுப்புகளைப் பெற்று இரட்டை இலை சின்னத்தை வீழ்த்துவேன் என்று சொல்வது நியாயமா தர்மமா என்று மக்கள் அவரிடம் கேட்கின்றனர். நேற்றைய தினம் ஆண்டிபட்டியில் நாராயணசாமி ஆதரித்து பிரச்சாரத்திற்கு செல்லும் போது அவர் சிவ பூஜையில் கரடி புகுந்த மாதிரி நமது வேட்பாளர்கள் வரக்கூடிய பகுதியில் அவர் புகுந்து விட்டார். இதனை அடுத்து அவர் சென்ற பகுதிகளில் பொதுமக்களும் டிடிவி தினகரன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ள டிடிவி நமது சின்னம் குக்கர் என்று சொல்ல அதற்கு அங்கிருந்த மக்கள் நமது சின்னம் இரட்டை இலை என்று சொல்ல எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
இரட்டை இலை சின்னத்தில் தான் இந்த மண்ணின் மைந்தர்கள் வாக்களித்துள்ளனர். எதிர்த்து நிற்பவர்கள் தேர்தலுக்கு தேர்தல் மாறி நிற்கிறார்கள். ஆனால் நமது வேட்பாளர் நாராயணசாமி 40 வருடங்களாக ஒரே கட்சி ஒரே சின்னத்தில் நிற்கிறார். தொடர்ந்து 40 ஆண்டுகள் அவர் உழைத்து வந்ததால் தற்போது வாய்ப்பளித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. நீங்கள் கூப்பிட்டவுடன் ஓடோடி வந்து சேவை செய்யக்கூடிய வேட்பாளர்தான் நாராயணசாமி. விவசாய குடும்பம் சாமானிய குடும்பத்தைச் சார்ந்தவர்தான் நாராயணசாமி. அவருக்கு வாக்களிக்க வேண்டும். விலைவாசி உயர்வு, எங்கு பார்த்தாலும் போதை பழக்கம், இதிலிருந்து தமிழகத்தை காப்பாற்றுவதற்கு நாராயண சுவாமிக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இங்கு இருக்கிற கூட்டத்தை பார்க்கும்போது நாராயணசாமி ஜெயித்துவிட்டார் என்பது போன்று தோன்றுகிறது. 101 கோடி ரூபாய் செலவிலே தொட்டம்மாள் அணை திட்டம் கொண்டுவரப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு டெண்டரும் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியிலே இந்த திட்டத்தை மூன்றாண்டு காலம் கிடப்பிலே போட்டு இருக்கின்றார்கள். இதற்கு தீர்வு காண வேண்டும் என்று சொன்னால் நாராயணசாமி நாடாளுமன்ற உறுப்பினராக வந்து இந்த திட்டத்தை நிறைவேற்றி தரக்கூடிய அந்த முயற்சியை எடுப்பார் என்பதை இந்த தேர்தல் பிரச்சார பயணத்திலே அவரின் சார்பிலே தெரிவித்துக் கொண்டு வாக்களிக்க வேண்டும் என. கேட்டுக்கொள்கிறேன்” என்றார். தொடர்ந்து பெண்கள் அனைவரும் குலவையிட்டு ஆசீர்வாதம் செய்யுமாறு ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து வேட்பாளர் நாராயண சாமி பேசுவையில், “பொதுமக்களுக்கு கொடுத்தது எல்லாம் பிடுங்கிவிட்டனர். மீண்டும் அதெல்லாம் கிடைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வந்தால் மட்டும் தான் கிடைக்கும். தேனி பாராளுமன்றத்தின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். நீங்கள் அனைவரும் இரட்டை இலை சின்னத்திற்கு தவறாமல் வாக்களிக்கும் படி உங்கள் மத்தியிலே கேட்டுக்கொள்கின்றேன். தொடர்ந்து தொட்டம்மாள் அணைத்திட்டம் என்பது ஏற்கனவே ஜிஓ பாஸ் ஆனது திமுக ஆட்சி அதை நிறுத்திவிட்டது. இந்த திட்டம் நிறைவேற்றினால் அதிமுகவிற்கு பெயர் கிடைத்துவிடும் என்பதால் முதலில் நிறுத்தி விட்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினராக நான் சென்றதும் முதல் வேலையாக விரைவில் ஆறு மாதம் ஒரு வருடத்திற்குள்ளாக இந்த திட்டத்தை கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன்” என்று பேசினார். செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் குலவை கெட்டு பெண்கள் அனைவரும் அவர்களை வரவேற்று வருகின்றனர்.