2024 மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. 10 தொகுதிகளில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. இதில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் தொகுதிக்கு மட்டும் பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் - கவிஞர் திலகபாமா
- அரக்கோணம் - கே.பாலு
- ஆரணி - கணேஷ் குமார்
- கடலூர் - தங்கர் பச்சான்
- மயிலாடுதுறை - ம.க ஸ்டாலின்
- கள்ளக்குறிச்சி - தேவதாஸ் உடையார்
- தருமபுரி - அரசாங்கம்
- சேலம் - அண்ணாதுரை
- விழுப்புரம் - முரளி சங்கர்
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. அதேபோல் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் இதற்கான பணிகள் மேற்கொண்டு வருகிறது. பறக்கும் படைகள் மற்றும் சோதனை சாவடிகள் மூலம் தீவிர கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காலை வரை சுமார் ரூ.9.3 கோடி மதிப்பிலான ரொக்கப்பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க அரசியல் கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதிமுக மற்றும் திமுக தரப்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வரும் நிலையில் இன்று காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமகவை பொறுத்தவரை கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இம்முறை அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால் இறுதியாக பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளது.
பாஜக கூட்டணியில் பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த முறை அதிமுக கூட்டணியில் 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 10 இடங்கள் பாமகவிற்கு கிடைத்துள்ளது. அதற்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 9 வேட்பாளர்கள் அறிவிப்பட்டிருக்கும் நிலையில் காஞ்சிபுரம் தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.