இந்தியாவின் 18வது மக்களவைப் பொதுத்தேர்தல் எப்போது எனவும் எத்தனை கட்டங்களாக நடத்தப்படுகின்றது எனவும் இன்று அதாவது மார்ச் 16ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். அதில் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தபடுகின்றது என தெரிவித்தார். அதில் முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியும், 7வது கட்டத்தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது என அறிவித்தார். 


இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “மக்கள் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என முடிவெடுத்துவிட்டனர். தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக தேர்தல் நடத்துவது எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால் தேர்தல் ஆணையத்திற்கு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தலை நடத்த யார் தேதி குறித்து கொடுத்தார்கள் என்ற கேள்வி எழாமல் இல்லை. பிரதமர் மோடி தேர்தல் தேதிகளை குறித்து தேர்தல் ஆணையத்திடம் வழங்கினாரா என இன்றைக்கு பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக தேர்தல் நடப்பது தெரிந்ததால்தான் பிரதமர் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து செல்கிறாரா என்ற கேள்வி எழுகின்றது” என தெரிவித்துள்ளார். 


தேர்தல் தேதி அறிவிப்புக்கும் பிரதமருக்கு தொடர்பு உள்ளதோ என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பதிலில், “ பிரதமர் ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு வரும்போது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குறை கூறிக்கொண்டே வருகின்றனர். பிரதமர் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருவதால்தான் தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுகின்றது என கூறுவது ஏற்புடையதல்ல. பிரதமர் தமிழ்நாட்டினை விடவும் கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் தெலுங்கானாவுக்கும் அடிக்கடி பயணம் மேற்கொள்கின்றார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு உண்மை என்றால் முதலில் அங்குதானே தேர்தல் நடக்கவேண்டும்?” என பொன்.ராதாகிருஷ்ணன் பதில் கேள்வி எழுப்பியுள்ளார். 


இது தொடர்பாக திமுகவைச் சேர்ந்த ராஜீவ் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ பிரதமர் மோடிக்கு தேர்தல் தேதி முன்கூட்டியே தெரிந்து இருக்கிறது அதனால் தான் முதற் கட்டம் தேர்தல் நடைபெற போகிற தமிழ்நாட்டில் பல்லடம், மதுரை, சென்னை, கன்னியாகுமரி, கோவை என தன் கட்சி பிரச்சார கூட்டங்களை முன்னரே நடத்தி உள்ளார்! இது அப்பட்டமான ஜனநாயக படுகொலை" எனத் தெரிவித்துள்ளார்.