அண்மைக் கால வரலாற்றில் முதல்முறையாக, தமிழ்நாட்டில் முதல்கட்டத்திலேயே மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகள் இன்று (மார்ச் 16) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத் தேர்தலுக்கு இன்னும் 33 நாட்களே உள்ளன.  வேட்புமனுத் தாக்கல் இன்னும் 3 நாட்களில், அதாவது மார்ச் 20ஆம் தேதி தொடங்க உள்ளது.


 ஒரு வார காலத்துக்கு, மார்ச் 27ஆம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த நாளான மார்ச் 28ஆம் தேதி, வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. இரண்டு நாட்களில் மார்ச் 30ஆம் தேதி அன்று, வேட்புமனுவை திரும்பப் பெறக் கடைசி நாள் ஆகும். இதனால் தமிழக அரசியல் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்று கேள்வி எழுந்துள்ளது.


4 முனைப் போட்டி


தமிழ்நாட்டில் ஆளும் திமுக, பிரதான எதிர்க் கட்சியான அதிமுக, மத்தியில் ஆளும் பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள், 4 முனைப் போட்டியில் களத்தில் இருக்கின்றன.


திமுக நிலை


திமுக ஓரளவு தனது தொகுதிப் பங்கீட்டை முடித்துவிட்டது. கூட்டணியில் மதிமுக (1), இந்திய கம்யூனிஸ்ட் (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2), விசிக (2) கொமதேக (1), ஐயூஎம்எல் (1)) உள்ளிட்ட தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டு விட்டன. எனினும் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு, எந்த எந்தத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக முடிவு செய்யவில்லை.


தொகுதிகளே முழுமையாக பங்கீடு செய்யப்படாத நிலையில், வேட்பாளர் தேர்வு இன்னும் முடிவு செய்யப்படவில்லை. வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு, திமுக தனது பரப்புரையைத் தொடங்க வேண்டி உள்ளது.




அதல பாதாளத்தில் அதிமுக


திமுக நிலை இப்படியென்றால், அதிமுக நிலை படு மோசமாக இருக்கிறது. அதிமுகவில் இன்னும் கூட்டணியே இறுதி செய்யப்படவில்லை. புதிய தமிழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் மட்டுமே, இதுவரை அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்துள்ளன. பாமக, தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளும், அதிமுக உடனும் பாஜக உடனும் தனித்தனியாகப் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.


கூட்டணியே முடிவாகாத நிலையில், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றை முடித்துப் பரப்புரையையும் தொடங்க வேண்டி இருக்கிறது. அதிமுக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதன்முதலாக மக்களவைத் தேர்தலைச் சந்திக்கும் சூழலில், கட்சியின் ஒவ்வொரு நகர்வும் அதிமுக தொண்டர்களால் உற்று நோக்கப்படுகிறது.


பாஜகவில் என்ன சூழல்?


பாஜகவில் தமாகா, ஓபிஎஸ் அணி, இந்திய ஜனநாயகக் கட்சி, அமமுக, சமக (பாஜகவுடன் கட்சி இணைப்பு), தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் இதுவரை கூட்டணியில் இணைந்துள்ளன. கூட்டணி இதுவரை இறுதி செய்யப்படவில்லை என்றாலும், தேர்தல் பிரச்சாரங்களை பாஜக தீவிரமாக முன்னெடுத்துள்ளது.




இந்த ஆண்டில் மட்டும் பிரதமர் மோடி 5 முறை தமிழகத்துக்கு வந்துள்ளார். குறிப்பாக கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, நெல்லை, சென்னை ஆகிய இடங்களுக்கு வந்து சென்றார். அரசின் நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்ததோடு, கட்சி பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்துகொண்டார். நாளை மறுநாள் (மார்ச் 18) மீண்டும் தமிழகம் (கோவை) வருகிறார் பிரதமர் மோடி. அதேபோல ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட பாஜகவின் முக்கியத் தலைவர்களும் தமிழ்நாட்டுக்கு வந்து பிரச்சாரத்தை முழு வீச்சில் மேற்கொண்டனர். 


நாம் தமிழர் கட்சி 


மற்ற கட்சிகள் எப்படியோ, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதால் கூட்டணி குறித்த பிரச்சினை இல்லாமல் இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகளுக்கும் 20 ஆண்கள், 20 பெண்கள் என வேட்பாளர்களை அறிவிக்க உள்ளது. பாதிக்கும் மேல் வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. 


எனினும் கர்நாடகாவில் இருக்கும் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டதால், சின்னம் இல்லாமல் தத்தளிக்கிறது நாம் தமிழர் கட்சி. இதனால் முழு வீச்சில் பிரச்சாரங்களை முன்னெடுக்க முடியாமல் நிற்கிறது நாம் தமிழர் கட்சி.  




எதிர்க் கட்சிகள் சாடல்


காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தேர்தல் தேதியை முன்கூட்டியே அறிந்துதான் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக அரசியல் தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வந்தார் என்று கடுமையாகச் சாடியுள்ளன. 


இந்த சூழலில், தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை குறுகிய காலத்தில் எவ்வாறு மேற்கொள்ளப் போகின்றன என்று கேள்வி எழுந்துள்ளது.