Sasikanth Senthil: கடந்த ஆண்டு கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி, காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதில் சசிகாந்த் செந்தில் முக்கிய பங்காற்றினார். 


திருவள்ளூர் வேட்பாளர் சசிகாந்த்:


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான, தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்  வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போதைய எம்.பிக்கள் பலருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டு இருந்தாலும், திருவள்ளூர் சிட்டிங் எம்.பியான ஜெயக்குமாருக்கு  வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் அந்த தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


யார் இந்த சசிகாந்த் செந்தில்?


பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை எப்படி கர்நாடகா மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றினாரோ, அதே மாதிரி, அதே மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிவர்தான் சசிகாந்த் செந்தில். பாஜக ஆட்சிக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டை வெட்ட வெளியில் போட்டுடைத்து, உயர்ந்த ஐ.ஏ.எஸ் பதவியையே தூக்கி எறிந்துவிட்டு, தமிழக காங்கிரஸ்சில் தன்னை இணைத்துக்கொண்டவர்.


அண்ணாமலை பாஜகவில் இணைந்தது முதல் அதிரடி அரசியல் செய்யத் தொடங்கினார். ஆனால், கோஷ்டிகளுக்கு குறைச்சல் இல்லாத தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் இணைந்த சசிகாந்த் செந்திலோ ஆக்கப்பூர்வ அரசியலை கையிலெடுத்தார். காங்கிரஸ் கட்சிக்குள் இந்த அரசியல் எடுபடாது என பலரும் அவருக்கு அட்வைஸ் செய்தனர். ஆனால், அவர் அதிலிருந்து பின்வாங்கவில்லை. அதே பாணி அரசியலில் அதிக கவனம் எடுத்துக்கொண்டார் அதனாலேயே அவர் மற்றவர்களை தாண்டி ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் கவனம் பெறத் தொடங்கினார். 


பேச்சும், செயலும்:


விவாதங்களில் பங்குபெறும்போதும் நேர்காணல்கள் கொடுக்கும்போதும் கூட, வெற்று அரசியல் பேச்சுகளை வைத்தும், சர்ச்சைகள் கருத்துகளை கொண்டும் அடித்துவிடாமல், புள்ளி விவரங்களோடும் எதிர்கால நோக்கோடும் சசிகாந்த் முன்வைக்கும் வைத்த வாதங்கள், காங்கிரஸ் கட்சியினரையே ‘யாருய்யா நீ’ என மாதிரி வாய்பிளக்க செய்தது. 


தமிழ்நாட்டின் இரண்டாவது ப.சிதம்பரம் என்றே அவருக்கு இன்னொரு பெயரை அவர்கள் சூட்டியுள்ளனர்.  தன்னுடைய செயல்பாடுகளால் தேசிய காங்கிரஸ் தலைமையை கவர்ந்த சசிகாந்த் செந்திலை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஆக்கிவிடலாம் என்ற முடிவுக்கே காங்கிரஸ் தலைமை வந்தது. ஆனால், பாஜக மாதிரியான ஒரு அதிரடி முடிவை காங்கிரசால் தமிழக காங்கிரஸ் கமிட்டியில் எடுக்க முடியவில்லை. அதனால்தான், சசிகாந்திற்கு பதில் இப்போது செல்வப்பெருந்தகை தலைவராகியிருக்கிறார்.


பாஜகவை வீழ்த்திய சசிகாந்த் செந்தில்:


சசிகாந்த் மீது ராகுல்காந்தி வைத்த நம்பிக்கையால் தான், மூத்த அரசியல் தலைவரான ஜெயக்குமாருக்கு மாற்றாக தற்போது திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.  இதற்கென ஒரு பிரத்யேக காரணமும் உண்டு. கர்நாடகா தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அடிக்கோலியவர்களில் மிக முக்கியமான இடம் தமிழ்நாட்டை சேர்ந்த இந்த சசிகாந்த் செந்திலுக்கு உண்டு. ஐ.ஏ.எஸ் புத்தி, ஏற்கனவே கர்நாடகாவில் பணியாற்றிய அனுபவம் இவற்றையெல்லாம் கொண்டு புது புது உத்திகளை பாஜகவிற்கு எதிராக கர்நாடகா அரசியல் களத்தில் கொளுத்திப்போட்டார் சசிகாந்த் செந்தில். அது பற்றி, படர்ந்து, எரிந்து, கடைசியில் பாஜக ஆட்சியையே கர்நாடகாவில் காலி செய்துவிட்டது.


PAY CM, PAY MLA என கர்நாடகாவில் பாஜக ஆட்சியின் ஊழல் முகத்தை தனது பரப்புரைகள் மூலம் துகிலுரித்துக்காட்டிவர் சசிகாந்த் செந்தில். அதனால் இவரே ஒரு ’மினி ஐபேக்’ என பாராட்டியிருக்கிறார் கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவககுமார்.  கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக இருந்த இவரது அறிவுறுத்தல்படியே, அங்கு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதுதான் காங்கிரஸ் கட்சி மீண்டும் அங்கு ஆட்சி அமைக்க மிக முக்கிய காரணமாக இருந்தது. 


வெற்றி கிட்டுமா?


தேவையின்றி அதிகம் பேசாத, ஆனால், பேச வேண்டிய இடங்களில் பேசாமல் இருக்காத சசிகாந்த் செந்திலுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகுதி திருவள்ளூர்.  சிட்டிங் எம்.பியாக இருக்கும் ஜெயக்குமார் மேல் மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. ஆனால், களப்பணியாற்றி கர்நாடகாவிலேயே ஆட்சியை அமைத்தவர், திருவள்ளூரில் தானே நிற்கும்போது ஜெயித்துவிட மாட்டாரா ?  என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.


சசிகாந்த் செந்தில் சுயவிவரங்கள்:


45 வயதான சசிகாந்த் கடந்த 1979ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். அவரது தந்தை சண்முகம் மாவட்ட நீதிபதியாகவும், தாய் அம்பிகா மத்திய அரசு ஊழியராகவும் பணியாற்றியவர்கள் ஆவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்தார். பட்டப்படிப்பு முடித்ததும் வேலை சென்றவர், அதில் இருந்து வெளியேறி UPSC தேர்வு தயாரானார்.


கர்நாடாக கேடரைச் சேர்ந்த சசிகாந்த 2009ம் ஆண்டு பேட்சில் தேசிய அளவில் 9வது இடம்பிடித்து ஐஏஎஸ் அதிகாரியானார். கர்நாடகாவ்ல் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பதவிகளை வகித்து சிறப்பாக செயல்பட்டதன் மூலம், பொதுமக்களிடையே நன்மதிப்பை பெற்றார். இருப்பினும், பாஜக தலைமையிலான கர்நாடாக அரசின் செயல்பாட்டால் அதிருப்தி கண்டு, கடந்த 2019ம் ஆண்டு சசிகாந்த் செந்தில் தனது ஐ.ஏ.எஸ். அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார்.