தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அழைத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இதன் அடிப்படையில் வேட்புமனு தாக்கல் இறுதி நாளான இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அண்ணாதுரை இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் வேட்புமனு தாக்கல் செய்ய செலுத்த வேண்டிய ரூபாய் 25 ஆயிரம் பணம் மற்றும் வேட்பு மனு வடிவத்தை மாரியம்மன் கோவிலில் வைத்து சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது, சட்டமன்ற உறுப்பினர் அருள், பாஜக தேர்தல் பொறுப்பாளர் அண்ணாதுரை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொருளாளர் எஸ்.கே.செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளில் தலைவர்கள் வந்து மாவட்ட தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாமக வேட்பாளர் அண்ணாதுரை, "நாடாளுமன்ற தேர்தலில் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதால் நிச்சயமாக வெற்றி பெறுவேன். தான் வெற்றி பெற்றால் சேலத்தில், எம்பி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்துவேன்” என்றார். மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள சரபங்கா மற்றும் திருமணிமுத்தாற்றை சுத்தப்படுத்த முயற்சி மேற்கொள்வேன். சேலத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் மேட்டூர் உபரி நீர் கொண்டு வந்து சேர்க்க முயற்சி மேற்கொள்வேன். சூரத்திலிருந்து சேலைகள் வந்ததால் சேலத்தில் ஜவுளி தொழில் நலிவடைந்துள்ளது. நான் வெற்றி பெற்றால் பிரதமரிடம் கூறி சூரத் சிலைகள் வராமல் தடுத்து இங்கு உள்ள சேலைகளை அரசு கொள்முதல் செய்ய வழிவகை காணுவேன்” என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுக, அதிமுக வேட்பாளர்கள் பணத்தை நம்பி களத்தில் இருக்கிறார்கள் ஆனால் நான் ஜனத்தை நம்பி இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த காலங்களில் சட்டமன்ற தேர்தலின் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தண்ணி காட்டும் வகையில் தான் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு எதிராக போட்டியிட்டு அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியவன் நான் என்றும் அவருக்கே தண்ணீர் காட்டிய எனக்கு நாடாளுமன்ற தேர்தல் பெறும் பொருட்டல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக பாமக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் வந்தபோது, பாமக மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளே நுழைய நின்றனர். தேர்தல் அலுவலகம் என்பதால் காவல்துறையினர் அவர்களை தடுக்க நிறுத்தினார். அப்போது பாமகவினர் மற்றும் காவலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து உள்ளே செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் பாட்டாளி மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சி அலுவலக நுழைவாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.