சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மனோஜ் குமார் மைக் சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் பரிசு பொருட்கள், பணத்தை வாங்கவேண்டாம். மக்களுக்கு நன்மை செய்பவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். வாக்களிக்கும் பெட்டியில் ஏழாவதாக உள்ள நமது ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்களியுங்கள். உங்கள் வீட்டில் உள்ள இளைஞர்களிடம் தோனியின் நம்பர் 7 மறக்காமல் தோனியை ஞாபகம் வைத்து வாக்களியுங்கள் என்று கூறுங்கள் என பிரச்சாரம் செய்தார்.



இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சேலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மனோஜ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “சேலம் நாடாளுமன்ற தொகுதி மக்களை நேரடியாக சந்திக்கும்போது நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. குறிப்பாக சேலம் நாடாளுமன்ற தொகுதியில் விவசாயமும், நெசவாளரும் அதிகம் நிறைந்துள்ளனர். இதில் மேட்டூர் அணையில் இருந்து வரும் உபரிநீரை விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், கனிமவளக் கொள்ளைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் அரசு மருத்துவமனை கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொள்ளப்படும். நாம் தமிழர் கட்சி மைக் சின்னத்தில் போட்டியிடுகிறது. மக்களிடம் மைக் சின்னம் என்பது நிறைய பேரிடம் சென்றடைந்துவிட்டது. மைக் சின்னம் சேராதவர்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் சேர்த்து விடுவோம்” என்றார்.



மேலும், தற்போது அரசு சூழல் குறித்தும், வேட்பாளர்கள் குறித்தும் முழு விவரங்களை தெரிந்து வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து மக்களிடம் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் தமிழர் கட்சி சார்பாக அறிவுறுத்தி வருவதாக கூறினார். மேலும் சின்னத்திற்காக வாக்கை வீணடிக்க வேண்டாம் என்று மக்களிடம் கோரிக்கை விடுத்து வருவதாக பேசினார். தேர்தலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பணத்தை கொடுத்து மக்கள் மனதை மாற்றுவார்கள். அதை நம்பி ஏமாற வேண்டாம் நாம் தமிழர் கட்சி பணம் கொடுக்கமாட்டார்கள், கொடுப்பவரிடம் வாங்கி ஏமாறவேண்டாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறினார். நாம் தமிழர் கட்சி தம்முடைய பலத்தை நம்பி பயணம் செய்து வருகிறது. திராவிட கட்சிகள் 70 ஆண்டு காலமாக பயணித்து இந்த சூழ்நிலையில் உள்ளது. ஆனால் 13 ஆண்டு காலமாக நாம் தமிழர் கட்சி பயணிக்கிறது. இந்த திராவிட கட்சிகளின் வளர்ச்சியை விட, நாம் திறமைகள் கட்சி அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்று நம்பிக்கை உள்ளது என்றும் தெரிவித்தார்.