தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஒவ்வொரு மும்மரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் விக்னேஷ் இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வருகை தந்த அதிமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விக்னேஷ் உடன் சேலம் அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் ஆகியோருடன் வருகை தந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். 



இதனிடையே அதிமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி மாற்று வேட்பாளர் பிரியா விக்னேஷ் வருகை தந்தபோது உள்ளே அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேட்பாளர் உடன் வேட்புமனு தாக்கல் செய்ய நான்கு பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளது என்றும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி தெரிவித்தனர். அப்போது மாற்று வேட்பாளர் வேட்பு மனுவை உடனடியாக கொடுக்க வேண்டும் காவல்துறையினர் தடுக்க வேண்டாம் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் உயர் அதிகாரிகளுடன் பேசிய பிறகு உள்ளே அனுமதித்தனர்.



இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திமுக சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வருகை தந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது வேட்பாளருடன் சேலம் திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் வந்தனர். குறிப்பாக வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வருகை தந்திருந்தனர். சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் இதுவரை ஏழு பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.