பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொள்ள மயிலாடுதுறை பகுதிக்கு வருவார்கள் என மயிலாடுதுறையில் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்‌.


தேர்தல் களம்


தமிழகத்தில் முதற்கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதி தொடங்கி தொடர்ந்து நாடு முழுவதும் ஜூன் 1 -ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 -ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிப்பது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுப்பது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.




பாஜக கூட்டணி 


அந்த வகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் 10 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் கடலூர் தொகுதியில் இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், தருமபுரி தொகுதியில் செளமியா அன்புமணி, மயிலாடுதுறை தொகுதியில் ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின், சேலத்தில் அண்ணாதுரை உள்ளிட்ட 10 நபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நபர்கள், பாமக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு சேகரித்து வருகின்றனர். 




மயிலாடுதுறை பாமக வேட்பாளர் 


அந்த வகையில், மயிலாடுதுறையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ம.க.ஸ்டாலின், ஆதரவு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒன்றாக, மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் சார்பில் பாமக வேட்பாளராக களம் காணும் ம.க. ஸ்டாலின், மயிலாடுதுறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் மூன்று தொகுதிகளை ஒன்றிணைத்து நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்குமாறு நோட்டீஸ் வழங்கி அழைப்பு விடுத்தார். அப்போது வேட்பாளருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்தனர். 




செய்தியாளர் சந்திப்பு 


அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் வேட்பாளர் ம.க. ஸ்டாலின் கூறியதாவது: மயிலாடுதுறை நவகிரக ஸ்தலங்களின் மையப் பகுதியாக அமைந்துள்ளது. இப்பகுதியில் பல்வேறு குறைகள் இருக்கிறது, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு அனைத்து குறைகளையும் நிவர்த்தி செய்வார். மயிலாடுதுறை நகரத்தில் பாதாள சாக்கடை பிரச்சனை பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. தான் வெற்றி பெற்ற பிறகு பாராளுமன்றத்தில் முறையிட்டு பாதாள சாக்கடை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பேன். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி வருகிறார். வெயில் காலம் என்பதால் அவர் பிதற்றிக் கொண்டு பேசுகிறார். 




நீர்மோர் அல்லது தர்பூசணி உள்ளிட்டவற்றை சாப்பிட்டு உடலை குளிர்ச்சியாக அவர் வைத்துக்கொள்ள வேண்டும் என விமர்சனம் செய்தார். அன்று முதல் இன்று வரை பாஜகவுடன் தான் பாமக பயணிக்கிறது எனவும், மேலும் அனைத்து கட்சி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ள மயிலாடுதுறை பகுதிக்கு வருவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேபோன்று கும்பகோணத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு நேரில் வந்து, அங்குள்ள பாஜக நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார்.


கும்பகோணம் கூட்டம்


இதனையடுத்து, நிகழ்ச்சி மேடையில் அவர் பேசியதாவது, ”எனது தந்தை கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால், என்னுடைய வாழ்க்கையே போராட்டம் என்ற ரீதியில் தொடங்கியது. பிரதமர் மோடி 3 வது முறையாக மீண்டும் அரியணை ஏறச் செய்ய வேண்டும். சிலர் 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் எனக கனவு காணுகிறார்கள். இந்த மயிலாடுதுறையில் நான் போட்டியிடவில்லை, மாறாக இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளிலும் பிரதமர் மோடிதான் போட்டியிடுகிறார் என எண்ணி தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்” எனத் தெரிவித்தார்.