ராமநாதபுரம் மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் முகச்சவரம் செய்து வாக்கு சேகரித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


மக்களவை தேர்தலுக்காக ஏற்பாடுகளை ஒருபக்கம் தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக  செய்துக் கொண்டிருக்கிறது.மறுபக்கம் தேசிய, மாநில அரசியல் கட்சிகள் விதவிதமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவானது 7 கட்டங்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 


இதில் தமிழ்நாட்டில் வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. 28 ஆம் தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. மார்ச் 31 ஆம் தேதி போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளது. இதில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாஜக என 4  முனை போட்டியானது நிலவுகிறது. 






அதேசமயம் வழக்கம்போல சுயேட்சை வேட்பாளர்களும் அதிகளவில் களமிறங்கியுள்ளனர். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இம்முறை சுயேட்சையாக பலாப்பழ சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேதொகுதியில் இவருடன் சேர்ந்து ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயர் கொண்ட 6 பேர் போட்டியிடுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


மேலும் வாக்காளர்களை கவர நாற்று நடுவது, வடை சுடுவது, பரோட்டா போடுவது, டீ போடுவது என பலவிதமான வித்தைகளை எல்லாம் வேட்பாளர்களும், தொண்டர்களும் செய்து காட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இப்படியான நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் பாரிராஜன் என்ற சுயேட்சை வேட்பாளர் ராமேஸ்வரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் நேற்று ஈடுபட்டார். அப்போது அங்குள்ள சலூன் கடை ஒன்றிற்கு சென்று வாக்கு கேட்டார். மேலும் அங்கு முகச்சவரம் செய்ய வந்தவருக்கு சவரம் செய்து மறக்காமல் தனக்கு ஓட்டுப்போட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.