அரசியல் அமாவாசை பழனிசாமி என கடலூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார்.

 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அந்த வகையில், நேற்று கடலூர் மாவட்டம் வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்புரம் பகுதியில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இந்திய கூட்டணி சார்பில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வழக்கறிஞர் சுதா ஆகியோருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

இப்பிரச்சார கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பாஜக- பாமக கூட்டணி வைத்துள்ளது, பாஜக - பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி, இந்தியா கூட்டணி கொள்கை கூட்டணி எனவும் தெரிவித்தார்.



 

இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், சமூக நீதி மீது பிரதமருக்கு அக்கறை இல்லை, சமூக நீதிக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை பகையாளி இந்தியாவாக மாற்ற நினைப்பவர் மோடி. தமிழ்நாட்டில் நிலவும் சமூக நீதி இந்தியா முழுவதும் பரவ கிடைத்த கூட்டணி இந்திய கூட்டணி என்றும், மீண்டும் மோடி பிரதமர் ஆனால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. பொய்களை வரலாறாக எழுதுவார்கள், ஆட்சி டெல்லியில் நடக்கிறதா? நாக்பூரில் நடக்கிறதா என்று தெரியாத நிலை வரும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

 

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய காரணமானவர் எடப்பாடி பழனிசாமி. பிரதமர் மோடி இந்தியாவிற்கு இருண்ட ஆட்சியை தருவது போல தமிழகத்திற்கு இருண்ட ஆட்சியை தந்தவர் பழனிசாமி, பச்சை துண்டு போட்டு கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி. அரசியல் அமாவாசையாக பழனிசாமி உள்ளார் எனவும் முதல்வர் ஸ்டாலின்  விமர்சித்தார்

 

அதிமுக இருக்கும் தொகுதிகளையும் திமுக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பறிக்கும் எனவும் இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை திமுக செய்த நலத்திட்டங்கள் அந்த வெற்றியைத் தரும் என்றும் அவர் தெரிவித்தார். பாசிசத்தை வீழ்த்த இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் 40-ம் நமதே நாடும் நமதே என்று உரையை முடித்தார். சிதம்பரம் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஸ்ரீதர் வாண்டையார், தமிழக அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், சி.வே.கணேசன், சிவசங்கர், மெய்ய நாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கடலூர் மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட  மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.