2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்றுடன் (ஏப்.8) முடிகின்றன. ஏப்ரல் 12ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தம் தொடங்க உள்ளது.


தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், மார்ச் 26ஆம் தேதி தொடங்கின. தமிழ் பாடத்துடன் தொடங்கிய தேர்வு, இன்று (ஏப்ரல் 8 ஆம் தேதி) வரை நடைபெறுகிறது. கடைசி நாளான இன்று சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெறுகிறது.


9.1 லட்சம் மாணவர்கள்


இந்த பொதுத் தேர்வை 12,616 பள்ளியை சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதுகிறார்கள். தேர்வானது, மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெறுகிறது.

முன்னதாக தமிழ்நாட்டு பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 22-ம் தேதி நிறைவடைந்தது. அதேபோல 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 4-ல் தொடங்கிய நிலையில், மார்ச் 25ஆம் தேதி நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து 10ஆம் வகுப்புத் தேர்வு தொடங்கியது.


செல்போனுக்குத் தடை


பொது தேர்வின் போது மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடாமல் இருக்க அறை கண்காணிப்பாளர்கள் 48,700 பேர் ஈடுபட்டுள்ளனர். 4,591 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை மின்சாரம், கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வறைக்குள் செல்போன் உள்பட மின்சாதன பொருட்கள் கொண்டுவர ஆசிரியர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


ஏப்.12 முதல் விடைத்தாள் திருத்தும் பணி


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத் தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து செல்லப்படும். அங்கிருந்து ஏப்ரல் 10 முதல் விடைத் தாள்கள், திருத்துதல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.  மாணவர்களுக்கு ஏப்ரல் 12 முதல் 22ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது.


இதற்காக தமிழகம் முழுவதும் 88 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 10ஆம் தேதி வெளியாக உள்ளன என அரசுத் தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.


விடைத்தாள் திருத்தும்போது தமிழ் வழி விடைத் தாள்களை தமிழ் வழி ஆசிரியர்களும் ஆங்கில வழி விடைத் தாள்களை ஆங்கில வழி ஆசிரியர்கள் மட்டுமே திருத்த வேண்டும் என்றும் அண்மையில் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.