நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி நாளை சேலம் வருகிறார். சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் சேலம், நாமக்கல் மற்றும் கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்களிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார்.


கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்பு:


பாஜக சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாஜக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சியினர் சேலம் வருகை தந்துள்ள நிலையில், பாஜக பொதுக்கூட்டத்தில் முதன் முறையாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக பிரமுகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் சேலம் வந்துள்ளனர். முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பதற்காக சேலம் வருகை தரவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாளை நடக்கவுள்ள பொதுக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



பாமக சார்பில் அன்புமணி பங்கேற்பு?


பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை இதுவரை நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாமல் உள்ளனர். அதிமுகவிடம் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் மற்றும் பாஜகவுடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும், சற்றுமுன் விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 19 பேர் கொண்ட தலைமை நிர்வாக கூட்டம் நடைபெற்று வந்தது. இதில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே. மணி உட்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முடிவில் பாமக-பாஜக உடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இத்தகவலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில் நாளை பிரதமர் பங்கேற்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அன்புமணி ராமதாஸ் சேலத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அறை ஒன்று புக்கிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


பிரதமர் சேலம் வருகை:


பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேலத்தில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் 12:50 மணியளவில் சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வருகிறார். பின்னர் 1 மணி முதல் 1:50 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். உரை முடிந்ததும் 1:55 மணிக்கு பொதுக்கூட்டம் மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சேலம் விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர் சேலம் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.