இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2024) 17வது சீசன் இன்று முதல் தொடங்குகிறது. இன்றைய முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) இடையே சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வேளையில் நேற்று தோனிக்கு மாற்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக, இன்று முதல் நாம் அனைவரும் எம்.எஸ்.தோனியை கேப்டனாக இல்லாமல் ஒரு வீரராக மட்டுமே பார்க்க முடியும். 


ஐபிஎல்-லில் ஆர்சிபி - சிஎஸ்கே இதுவரை நேருக்குநேர்: 


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் 31 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 போட்டிகளில் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதேநேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும், இரு அணிகளுக்கிடையேயான ஒரு போட்டி மழையின் காரணமாக முடிவு இல்லாமல் போனது. இரு அணிகளும் மோதிய கடைசி ஐந்து போட்டிகளில் சென்னை அணி 4-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 


போட்டிகள் - 31
சிஎஸ்கே வெற்றி - 20
ஆர்சிபி வெற்றி - 10
முடிவு இல்லை - 1 


எம்.ஏ. சிதம்பரம் (சேப்பாக்கம்) ஸ்டேடியத்தில் இரு அணிகளும் நேருக்குநேர்: 


சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இரு அணிகளும் இதுவரை எட்டு போட்டிகளில் மோதியுள்ளது. அதில், சென்னை அணி, பெங்களூரு அணிக்கு எதிராக 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 


போட்டிகள் - 8
சிஎஸ்கே வெற்றி - 7
ஆர்சிபி வெற்றி - 1


சின்னசாமி ஸ்டேடியத்தில் இரு அணிகளும் நேருக்குநேர்: 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சொந்த எம். சின்னசாமி ஸ்டேடியத்தில், இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. அதில், சென்னை அணியே முன்னிலை பெற்றுள்ளது.


போட்டிகள் - 10
சிஎஸ்கே வெற்றி - 5
ஆர்சிபி வெற்றி - 4
முடிவு இல்லை - 1


ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த கடைசி சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி போட்டி:


கடைசியாக ஐபிஎல்லில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான கடைசி ஆட்டம் ஏப்ரல் 17, 2023 அன்று பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது.


சென்னை அணியில் அதிகபட்சமாக டெவோன் கான்வே 45 பந்துகளில் 83 ரன்களும், அஜிங்க்யா ரஹானே 20 பந்துகளில் 37 ரன்களும் எடுத்தனர். மேலும், சிவம் துபே, 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 52 ரன்களும், கடைசி ஓவரில் மொயீன் அலி 9 பந்துகளில் 19 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை 226 ரன்களுக்கு கொண்டு சென்றனர்.


விராட்டின் மந்திரம் பலிக்கவில்லை:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விராட் கோலி மற்றும் கேப்டன் டுபிளெஸ்ஸிஸ் தொடக்கம் கொடுத்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 6 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்ப, கேப்டன் டு பிளெசிஸ் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 63 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். கிளென் மேக்ஸ்வெல் 36 பந்துகளில் 76 ரன்கள் எடுக்க, தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். இவர்களை தவிர, வேறு எந்த பேட்ஸ்மேனும் சிறப்பாக செயல்படவில்லை. இதையடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 


சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியம் எப்படி..? 


எம்.ஏ. சிதம்பரம் (சேப்பாக்கம்) ஸ்டேடியத்தில் இதுவரை 76 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில், முதலில் பேட்டிங் செய்த அணி 46 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 30 முறை வெற்றி பெற்றுள்ளது.