நாடே மிகவும் எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல், முதல் கட்டத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளன.
பாஜக தொகுதிப் பங்கீடு நிறைவு
தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக 10 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் தமாகா 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
யார் யாருக்கு எந்த எந்தத் தொகுதிகள்?
அமமுக பாஜக கூட்டணியில் இரண்டு தொகுதிகளைப் பெற்றுள்ளது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் (ஜான் பாண்டியன்), ஐஜேகே (இந்திய ஜனநாயகக் கட்சி - பாரிவேந்தர்), புதிய நீதிக் கட்சி (ஏ.சி.சண்முகம்), இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் (தேவ நாத யாதவ்)ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பாமகவின் 10 தொகுதிகள் எவை?
பாமக மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம், அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், கடலூர், சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மயிலாடுதுறை, திண்டுக்கல் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.