மோடியின் புதிய திட்டம்:


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில்  நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், என் இனிய தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம். வணக்கம் திருநெல்வேலிக்கு, புண்ணிய பூமியான நெல்லையப்பர் காந்திமதிக்கு வணக்கத்தை தெரிவித்து உரையை தொடங்குகிறேன் என தொடங்கினார். உங்களின் உற்சாகம் வரவேற்பை பார்க்கும் பொழுது திமுகவிற்கு, இந்தியா கூட்டணிக்கு தூக்கமே தொலைந்திருக்கும். தமிழ் புத்தாண்டை கொண்டாடிய வாழ்த்தோடு பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் முன்னேற்றத்திற்கு பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. வளர்ந்த தமிழகம் தான் வளர்ந்த பாரதமாக மாறும் என்ற நம்பிக்கையோடு தேர்தல் அறிக்கையை சமர்பிக்கிறோம். கடந்த 10 வருடமாக பாஜக கடுமையாக உழைத்ததோடு பல நல்ல திட்டங்களை தந்துள்ளது.  நெல்லை - சென்னைக்கு நடுவே வந்தே பாரத் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த பகுதி மக்கள் பல நன்மைகளை பெற்று முன்னேறிக்கொண்டு இருக்கின்றனர்.  மிக விரைவாக தெற்கு பகுதியிலும் புல்லட் ரயிலை தொடங்க திட்டமிட்டுள்ளோம். புதிய அரசு வந்தவுடன் அதற்கான பணிகள் துவங்கும் என்றார். 


தேர்தல் அறிக்கையில் தமிழுக்கு அங்கீகாரம்:


தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள சகோதரிகள் தாய்மார்கள் மோடியை ஆதரிக்கிறார்கள் என்று பலரும் ஆச்சரியப்படுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்று அரசியல் வித்தகர்களும், நிபுணர்களுக்கும் இதன் காரணம் புரியவில்லை, இதற்கு காரணம் நான் அவர்கள் படும் சிரமத்தையும், துன்பத்தையும் உணர்ந்ததால் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்  என்று நினைப்பதால் தான் 1 கோடி 25 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு ஜல்ஜீவன்  மிஷனில் கொடுத்துள்ளோம். 12 லட்சம் வீடுகள் வீடுகள் கட்டியுள்ளோம். 40 லட்சம் கேஸ் இணைப்பு கொடுத்துள்ளோம். 57 லட்சம் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு 800 கோடிக்கு நிதி உதவி கொடுத்துள்ளோம். முத்ரா லோன் 3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை, கலாச்சாரத்தை நேசிக்கும் நீங்கள்  பாஜவையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டீர்கள். அதனால் தேர்தல் அறிக்கையில் தமிழ் மொழிக்கு உலகத்தின் அங்கீகாரத்தை பெற்று தருவதாக வாக்களித்துள்ளனர். உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையம் ஏற்படுத்தப்படும். 


 




திமுக-காங்கிரசின் எதிர்ப்பு அரசியல் - தேசதுரோகம்:


திமுகவும், காங்கிரசின் சித்தாந்தமே வெறுப்பினாலையும், எதிர்ப்பினாலயும் உருவாக்கப்பட்டது. அவர்கள் தமிழ் அடையாளத்தையும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் திராவிடத்தின் பெயரால் அழிக்க நினைக்கிறார்கள். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டையும், செங்கோலையும் திமுக - காங்கிரஸ் எப்படி எதிர்த்தார்கள் என மறந்து விடாதீர்கள். இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு அவர்கள் பாசையிலேயே நாம் பதிலடி கொடுக்கிறோம். இந்தியாவின் மீது பற்று வைத்திருக்கும் ஒவ்வொருக்கும் பாஜக தான் பிடித்த கட்சியாக இருக்கும். பாஜக எப்பொழுதும் தமிழ் மொழியை, நாட்டை, மக்களை  நேசிக்கும் கட்சி. இன்று இந்தியாவை தன்னிறைவு அடைய செய்ய போராடிய சுதந்திர போராட்ட வீரர் வஉசியை நினைத்துப்பார்க்கிறேன். தேசபக்தியும், நேர்மையும் கொண்ட தலைவர் காமராஜரை பின்பற்றி தான் பாஜக நேர்மையான தூய்மையான அரசியலை முன்னெடுத்து செல்கிறது. ஆனால் திமுக - காங்கிரஸ் காமராஜரை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். எங்களது லட்சியம் தூய்மையான அரசியல். அந்த பயணத்தில் எம்ஜிஆரின் கனவுகளை தமிழகத்தில் முன்னெடுத்து செல்கிறது பாஜக, ஆனால் அவரையும் திமுக தொடர்ந்து அவமதித்துக் கொண்டிருக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி எவ்வளவு தேச விரோத செயல்களை செய்துள்ளது என இந்த நாடு முழுவதும் தெரியும். கச்சத்தீவை நம்மிடமிருந்து துண்டித்து எப்படி வேறு நாட்டுக்கு கொடுத்தார்கள் என்று. திமுகவும் - காங்கிரஸும் திரை மறைவாக ரகசியமாக செய்த இந்த பிழையை மன்னிக்க முடியாத பாவமாக நான் கருதுகிறேன். அவர் செய்த தேச துரோகத்தை ஆவணங்களோடு பாஜக அம்பலப்படுத்தியது என்றார்.


அடுத்த தலைமுறைக்கான அரசியலும், திமுகவின் பயமும்:  


மேலும் பேசிய அவர், தமிழ்நாடு இன்று போதையை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறது. குடும்ப அரசியலில் இருப்பவர்கள் இதை ஊக்குவித்து கொண்டிருக்கின்றனர். இதனால் மிகப்பெரிய சோகத்தை தமிழகம் சந்தித்து கொண்டிக்கிறது. அதிகாரமிக்கவர்களின் அனுமதியோடு போதை பரவிக்கொண்டு இருக்கிறது. இதனை விற்பவர்களை  யார் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சின்னக்குழந்தையை கேட்டால் கூட சொல்லும். இதனை மோடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். போதை வணிகத்தோடு  போராடி அதை இந்த தேசத்தை விட்டு ஒழிப்பேன் என்று உறுதி கொடுக்கிறேன். அடுத்த தலைமுறையை போதை இல்லாத உலகத்திற்கு பாஜக அழைத்து செல்லும். எனவே  பாஜகவை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  இந்த தேர்தலுக்காக தமிழக மக்களை நான் சந்திக்கும் கட்சி கூட்டம். அதனால் தமிழக மக்களுக்கு ஒரு செய்தியை சொல்ல நினைக்கிறேன். நீங்கள் தரும் ஆதரவை பார்க்கும் பொழுது, ஒரு புது வரலாறை, புது இதிகாசத்தை நீங்கள் படைக்க போகிறீர்கள். பிஜேபி தமிழ்நாட்டில் எங்க இருக்கிறது என்று கேட்ட திமுகவும் காங்கிரசு முகத்தில் கரிய பூசுகிறது மாதிரி வியந்து போகும் அளவிற்கு நீங்கள் மிகப்பெரிய ஆதரவை வழங்கப்போகிறீர்கள் என்றார். அவர்களிடம் உள்ள பழைய டேப்ரிகார்டில் பாஜக எதிர்ப்பு பாட்டை மட்டும் திரும்ப திரும்ப போடுகின்றனர். அவர்கள் கட்சி கொடுத்த சொந்த வாக்குறுதியையும், உங்கள் தேவையையும் நிறைவேற்ற தெரியாமல் எப்படி ஆட்சி நடத்தப்போகிறார்கள்? எனவே அனைவரும் ஒரே ஒரு முறை பாஜகவிற்கு வாக்களியுங்கள். உங்கள் கனவுகள் தான் எங்கள் லட்சியம்.


உங்கள் வளர்ச்சி தான் என்னுடைய இலக்கு என்றார். 2047 தான் என்னுடைய 24/7 என்னுடைய சிந்தனையாக இருக்கும். உங்கள் அன்பும் ஆதரவும் இந்த குரலும் தேர்தல் கூட்டமாக தெரியவில்லை, வெற்றியின் கூட்டமாக தெரிகிறது. இங்கு ஆட்சியில் இருக்கும் திமுக அரசிற்கு பயம் பதட்டம் வந்துவிட்டது உங்கள் ஆதரவை பார்த்து.  அதனால் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தை தடுக்க ஆரம்பித்துவிட்டனர். நீங்கள் பயப்படவேண்டாம் மொத்த தமிழ்நாடும் நானும் உங்களுடன் இருக்கிறோம்.  அதனால் துணிச்சலோடு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்கலாம் என்றார். மோடி பேசிக்கொண்டிருக்கும்போது கூட்டத்தில் இருந்த பலர் மோடி மோடி என கோஷமிட்டனர். இதனால் உற்சாகமடைந்த மோடி அனைவரையும் டார்ச் லைட் அடிக்க கேட்டு கொண்டார். உடனே அனைவரும் எழுத்து நின்று டார்ச் லைட் அடித்தனர். தொடர்ந்து பேசிய மோடி,  இருட்டு அறையில் உட்காந்து கொண்டிருக்கும் இந்தி கூட்டணிக்கு நீங்கள் காட்டும் வெளிச்சம் டெல்லி வரை தெரியும் என்று பேசி உரையை முடித்தார்.