Lok Sabha Election 2024: இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. வரும் ஜூன் 1ஆம் தேதி, கடைசிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.


ஏற்கனவே, 5 கட்ட வாக்குப்பதிவில் நாடு முழுவதும் உள்ள 428 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, ராஜஸ்தான், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.


நிறைவு பெற்ற 6ஆம் கட்ட தேர்தல்: இந்த நிலையில், 6ஆம் கட்ட வாக்குப்பதிவும் பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி இன்று அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய தேர்தல் மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.


6 மணி நிலவரப்படி, 59.01 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் முதற்கட்ட தகவல் வெளியிட்டுள்ளது. வழக்கம்போல், அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 78.19 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் 62.71 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


குறைந்தபட்சாக ஜம்மு காஷ்மீரில் 52.28 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகாரில் 53.30 சதவிகித வாக்குகளும் ஹரியானாவில் 58.27 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. தேசிய தலைநகர் டெல்லியில் 54.48 சதவிகித வாக்குகளும் ஒடிசாவில் 60.07 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 54.48 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.


ஏமாற்றம் அளித்த டெல்லிவாசிகள்: பீகார், மேற்குவங்கத்தில் தலா 8 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. அதேபோல, டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும் உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது.


சென்னை, மும்பை, பெங்களூரு நகரங்களை போன்று டெல்லியிலும் வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளது. சாந்தினி சவுக் தொகுதியில் 53.60 சதவிகித வாக்குகளும் கிழக்கு டெல்லியில் 54.37 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. 


நியூ டெல்லி தொகுதியில் 51.54 சதவிகித வாக்குகளும் வட கிழக்கு டெல்லியில் 58.76 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. வட மேற்கு டெல்லியில் 53.81 சதவிகித வாக்குகளும் தெற்கு டெல்லியில் 52.83 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது. மேற்கு டெல்லி தொகுதியில் 54.90 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.


குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் இன்று ஜனநாயக கடமை ஆற்றினர். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம். எஸ். தோனி, தனது வாக்கினை செலுத்தினார்.