Lok Sabha Election 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மூன்றாம் கட்டமாக, 94 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


மக்களவை தேர்தல் - 3ம் கட்ட வாக்குப்பதிவு:


 நாடு முழுவதுமுள்ள நாடாளுமன்றத்தின் 543 மக்களவை தொகுதிகளுக்கு, 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 39 தொகுதிகள் உட்பட, மொத்தம் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 88 மக்களவைத் தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலயில் நாளை மறுநாள் அதாவது மே 7ம் தேதி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


94 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு: 


மூன்றாம் கட்டத்தில் அசாமில் 4 மக்களவை தொகுதிகள், பீகாரில் 5 மக்களவை தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 மக்களவை தொகுதிகள், தாத்ரா & நாகர் ஹாவேலி மற்றும் டாமன் & டையூவில் 2 மக்களவை தொகுதிகள், கோவாவில் 2 மக்களவை தொகுதிகள், குஜராத்தில் 26 மக்களவை தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரில் 1 மக்களவை தொகுதி, கர்நாடகாவில் 14 மக்களவை தொகுதிகள், மத்தியபிரதேசத்தில் 9 மக்களவை தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 மக்களவை தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 10 மக்களவை தொகுதிகள் மற்றும் மேற்குவங்கத்தில் நான்கு என மொத்தம் 94 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை:


முதல் இரண்டு கட்டங்களில் மத்தியில் ஆளும் பாஜக உடன்,  திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் கருத்து மோதலில் ஈடுபட்டன. ஆனால் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரையில் தான் பாஜக - காங்கிரஸ் இடையேயான கருத்து மோதலில் அனல் பறந்தது. காங்கிரஸ் கட்சி வாரிசு வரி விதிக்க முற்படுவதாகவும், ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பாகிஸ்தானை பின்பற்றுவதாகவும் பிரதமர் மோடி கடுமையாக சாடினார். மறுபுறம் பாஜக பொய்யான வாக்குறுதிகளை தருவதோடு, எதிர்க்கட்சி தலைவர்களின் பேச்சை திரித்து பேசுகிறது, மதப் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது, வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் குறித்து பேசுவதில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் 3ம் கட்ட தேர்தலுக்காக, சூறாவளி பரப்புரை மேற்கொண்டனர். இந்நிலையில், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனல், அரசியல் கட்சி தலைவர்கள் பரப்புரைக்காக பல்வேறு பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். 


 நட்சத்திர வேட்பாளர்கள்:


மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (காந்திநகர்), விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (குணா), சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் (மெயின்புரி), மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் (விதிஷா), தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே (பாரமதி) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக உள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் 1,351 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்