புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பைக்கில் வந்து வாக்களித்து விட்டுச் சென்றது காண்போரை சுவாரசியத்தில் ஆழ்த்தியது.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் 40 மக்களவைத் தொகுதிகளில் இன்று (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள், பொது மக்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களின் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.


ஒரே தொகுதி கொண்ட புதுவை


 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி ஒரு தொகுதியை மட்டுமே கொண்டிருக்கிறது. இதில் காங்கிரஸ் சார்பில் வைத்திலிங்கம் களம் காண்கிறார். பாஜக சார்பில் நமச்சிவாயம் தேர்தலில் நிற்கிறார். வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பைக்கில் வந்து வாக்களித்து விட்டுச் சென்றது காண்போரை சுவாரசியத்தில் ஆழ்த்தியது.






தீவிர பைக் பிரியர்


புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீவிர பைக் பிரியர். குறிப்பாக யமஹா ரக பைக்குகள் மீது சிறு வயது முதலே ஆர்வம் கொண்டவர். அமைச்சராக இருந்த போதும் முதல்வராக இருந்த போதும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதும் யமஹா பைக்கில் ரங்கசாமி பயணிப்பார். தொகுதி மக்களையும் அவ்வப்போது யமஹா பைக்கில் சென்று சந்தித்து வந்தார்.


எனினும் வயது முதிர்வு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால், பைக்கில் இருந்து காருக்கு மாறி இருந்தார் ரங்கசாமி. இந்த நிலையில் இன்று வாக்களிக்க புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பைக்கில் சென்றார்.


யமஹா பைக்கில் பயணம்


தனது வீட்டு அருகில் உள்ள திலாஸ் பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளியில் யமஹா பைக்கில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார். இது அங்கிருந்த மக்களையும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தொண்டர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 13 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்.