Lok Sabha Election 2024:  நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில்  68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


மக்களவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு:


நாட்டின் அதிகாரமிக்க பதவியான பிரதமர் பொறுப்புக்கு, அடுத்து வரப்போவது யார்? என்பதை நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மூலம் பொதுமக்கள் தேர்வு செய்கின்றனர். அதன்படி, நாடு முழுவதுமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள் உட்பட, 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் இன்று முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணி முதல் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை ஆறு மணிக்கு முன்பாக வந்து வரிசையில் நிற்பவருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். 


வாக்களிப்பதற்கான ஆவணங்கள்:


கீழே பட்டியலிடப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம்.



  • வாக்காளர் அடையாள அட்டை

  • ஆதார் அட்டை

  • MNREGA வேலை அட்டை (100 நாள் வேலை திட்டத்திற்கான அடையாள அட்டை)

  • கணக்குப் புத்தகங்கள் ( வங்கி அஞ்சலங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை)

  • மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை ( மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது)

  • ஓட்டுநர் உரிமம்

  • பான் கார்டு

  • NPR இன் கீழ் RGI வழங்கிய ஸ்மார்ட் கார்டு

  • இந்திய பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

  • ஓய்வூதிய ஆவணம் புகைப்படத்துடன் கூடியது

  • பணியாளர் அடையாள அட்டை (மத்திய மாநில அரசுகள், மத்திய? மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள்)

  • அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற/ சட்டமன்றப் பேரவை/ சட்டமன்ற மேலனை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது)


தமிழ்நாட்டில் 950 வேட்பாளர்கள்:


தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முன போட்டி நிலவுகிறது. அதன்படி, தேசிய, மாநில கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் ஆண்கள் 874 பேர், பெண்கள் 76 பேர் அடங்குவர்.  இதுபோக விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைட்தேர்தலிலும், இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


6.23 கோடி வாக்காளர்கள்:


தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில்  3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 பேர் ஆண் வாக்காளர்கள்.  3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 69 பேர் பெண் வாக்காளர்கள்.  மூன்றாம் பாலினத்தவர்கள்  8 ஆயிரத்து 465 பேர். மேலும், முதல் முறை வாக்காளர்கள் 10 லட்சத்து 90 ஆயிரத்து 574 பேர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இவர்களுக்கான பூத் சிலிப்கள் கடந்த ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை விநியோகிக்கப்பட்டுள்ளன.


68,321 வாக்குச்சாவடிகள்:


தகுதியான நபர்கள் வாக்களிக்க ஏதுவாக தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில்,  8050 பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் 183 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 40-க்கும் அதிகமான வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தம்  1,58,568 வாக்குபதிவு இயதிரங்களும் 81,157 கட்டுபாட்டு இயதிரங்களும்,  8,685 VVPAT இயந்திரங்களும் பயன்படுத்தப்பட உள்ளன. தேர்தல் பணிகளில் 3.32 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். 


பாதுகாப்பு ஏற்பாடுகள்:


190 கம்பெனி துணை ராணுவ படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநில காவல்துறையைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  39 பொது பார்வையாளர்கள் 20 காவல் பார்வையாளர்கள் 58 செலவின பார்வையாளர்கள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.