நாகையில் கம்யூனிஸ்ட் கட்சி மாற்று வேட்பாளரின் உறுதிமொழி படிவத்தை அதிமுக வேட்பாளருக்கு மாற்றி வழங்கிய அதிகாரிகள் பரபரப்பு ஏற்பட்டது.

 

நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் செல்வராஜூக்கு எதிராக அதிமுக களம் காண்கிறது. பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் களத்தில் நின்றாலும் திமுக கூட்டணிக்கும் - அதிமுகவிற்கும் நேரடி போட்டி இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு மாத காலத்திற்கு முன்பு அதிமுகவில் இணைந்த வேதாரண்யத்தை சேர்ந்த சுர்ஜித்சங்கர் அதிமுக சார்பாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.



 

அதிமுக வேட்பாளரின் வேட்பு மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானி டாம் வர்கீஸ் வேட்பாளரிடம் வேட்பாளர் உறுதிமொழி படிவத்தை வழங்கினார். அப்போது அந்த படிவத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாற்று வேட்பாளரின் பெயர் இருந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார். படிவம் மாறிவிட்டது என்று அதிகாரிகள் படிவத்தை அவரிடம் இருந்து வாங்கி இவருக்கு உண்டான படிவத்தை தேடினர். தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகள் வெளியே ஓடி சென்று நீண்ட நேரம் போராடி அதிமுக வேட்பாளரின் உறுதிமொழி படிவத்தை கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து அதிமுக வேட்பாளர் சுர்ஜித்சங்கர் உறுதிமொழியை வாசித்து கையெழுத்திட்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்து ஒரே மாதத்தில் எம்பி சீட் வாங்குவதற்கு அவ்வளவு போராட்டம் என்றால் வேட்புமனு தாக்கல் செய்வதற்கும் இவ்வளவு போராட்டமா? என பெருமூச்சு விட்டபடி புறப்பட்டு சென்றார்.